

நாடு முழுவதும் கோடை வெப்பம் தனது பிடியை இறுக்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல பகுதிகளில் வெப்பநிலை ஏற்கனவே 40-45 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெப்ப அலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
வட மாநிலங்களான கிழக்கு ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளுள் கடுமையான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயல்பை விட வெப்பநிலை 3°C முதல் 5°C வரை அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) வெப்ப அலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதற்கிடையே அத்தியாவசிய தேவை மற்றும் வேலை விஷயமாக பைக்குகளில் நகரப்பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் போது வெயிலினால் கடும் சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.
இதனால் பொதுமக்களிள் சிரமத்தை அறிந்த அரசும் அனைத்து முக்கிமான சிக்னல்களில் பொதுப்பணித்துறை சார்பில் காற்றில் சரிந்து விடாத வகையில் இரும்பு குழாய்கள் மூலம் பலமான தூண்கள் கொண்டு பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிர வெப்ப அலை காரணமாக, ஒரு புதுமையான நடவடிக்கையாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மதிய நேரங்களில் போக்குவரத்து சிக்னல்கள் (Traffic Signals) தற்காலிகமாக அணைக்கப்படுகின்றன. சூரத், அகமதாபாத் மற்றும் நாக்பூர் மாநகராட்சி அதிகாரிகள், பிற்பகல் உச்ச நேரங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல் செயல்பாடுகளை மாற்றியமைத்துள்ளனர். குறிப்பாக மதியம் 12:30 முதல் 4:00 மணி வரை சிக்னல்கள் அணைக்கப்படுகின்றன அல்லது 'பிளிங்கர்' (blinker) முறையில் இயக்கப்படுகின்றன. சாலைகளில் பயணிக்கும் மக்கள், பரபரப்பான சந்திப்புகளில் நேரடி வெயிலின் கீழ் காத்திருக்க வேண்டிய நிலையைத் தடுக்கும் ஒரு முயற்சியே இந்த நடவடிக்கை.
அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் பல நகரங்கள் (காண்டியா போன்றவை), சூரத் (மதியம் 1-4 மணி), அகமதாபாத்தில் சுமார் 70 சிக்னல்கள் பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரையும்,
நாக்பூரில், 31 முக்கிய சந்திப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் சிக்னல்கள் அணைக்கப்படுகின்றன அல்லது 'பிளிங்கர்' (blinker) முறையில் இயக்கப்படுகின்றன. சூடான தார்ச் சாலைகளில் இருந்து வரும் வெப்பத்திலிருந்து வாகன ஓட்டிகளைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம். இதனால், வாகன ஓட்டிகள் 'நில், கவனி, செல்' என்ற அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இந்த முறைக்கு பொதுமக்களிடமிருந்து சாதகமான வரவேற்பும் கிடைத்துள்ளது.
விதர்பாவில் வெப்பநிலை தொடர்ந்து 42°C-ஐத் தாண்டி வரும் நிலையிலும், மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் ஏற்கனவே 45°C-ஐத் தொட்டுள்ள நிலையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள கான்கிரீட் சாலையிலிருந்து வெளிப்படும் கடுமையான வெப்பம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் கடுமையான சுகாதார அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கடும் வெயிலின்போது, குறிப்பாக 42°C முதல் 45°C வரை வெப்பநிலை இருக்கும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்னலில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வெப்பத்தாக்கத்திற்கு (Heatstroke) உள்ளாவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிக்னல்கள் ஆஃப் செய்யப்பட்டாலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் விபத்துகளைத் தடுக்கவும் அந்தந்த முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்கள் நேரில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.