இந்த 3 காரணங்களால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படலாம்! வாக்கு எண்ணிக்கையில் உள்ள விதிகள் என்ன?

ஒட்டுமொத்த மாநிலத்தின் பார்வையும் மே 4-ம்தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் மீது திரும்பியுள்ளது.
Vote counting centre
Vote counting centre
Updated on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 29-ம்தேதியுடன் நிறைவடைந்தது. வரும் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. முதல்முறையாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை மற்றும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இருதினங்களுக்கு முன்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அரசியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி ஓட்டு போட்டவர்களிலும் பலர் நாம் ஓட்டு போட்ட கட்சி வெற்றி பெறுமா என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் எதிர்பார்ப்புடன் வெளிவந்த முடிவும் எந்த முடிவுக்கும் வராதபடி முடியை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டதுதான் உண்மை.

இதையும் படியுங்கள்:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதம் தெரியுமா?
Vote counting centre

அதாவது கருத்துக்கணிப்பை வெளியிட்ட நிறுவனங்கள் 4 விதமான முடிவும் வர வாய்ப்பு இருப்பதாக குழப்பத்தோடு ஒரு முடிவை வெளிப்படுத்தி எல்லோரையும் குழம்ப வைத்து விட்டன.

இந்த தேர்தலில் மக்கள் எந்த மாதிரி முடிவுகளை யூகிக்கிறார்களோ அந்த முடிவுகள்தான் கணிப்புகளாகவும் வெளிவந்துள்ளது. எதையும் உறுதிப்படுத்த முடியாமல் எல்லா தரப்பிலுமே குழப்பமே நிலவுகிறது.

இதற்கான விடை இன்னும் 24 மணி நேரத்தில் தெரியும் என்பதால் ஒட்டுமொத்த மாநிலத்தின் பார்வையும் மே 4-ம்தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் மீது திரும்பியுள்ளது.

அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது, எந்தச் சூழலில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படும் மற்றும் மறு வாக்கு எண்ணிக்கைக்கான விதிகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க..

வாக்கு எண்ணப்படும் நாளான காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் அதனை நிறுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ சட்டப்படி அதிகாரம் உண்டு. அதன்படி,

* ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் மின்னணு இயந்திரத்தில் (EVM) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, முடிவுகளைப் பெற முடியாத சூழல் உருவானால், அந்தப் பெட்டியின் எண்ணிக்கை மட்டும் நிறுத்தப்படும்.

* வாக்கு எண்ணும் மையத்தில் வன்முறை வெடித்தாலோ அல்லது வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வாக்கு எண்ணிக்கை உடனடியாக நிறுத்தப்படும்.

* வாக்குப்பதிவின் போது ஏதேனும் ஒரு சாவடியில் பூத் கைப்பற்றல் நடந்திருப்பதாக புகார் எழுந்து அது உறுதி செய்யப்பட்டால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அந்தத் தொகுதியின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்படலாம்.

இத்தகைய சூழலில், தேர்தல் நடத்தும் அலுவலர் உடனடியாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட சாவடிகளுக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதேபோல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு, ஒரு வேட்பாளர் அல்லது அவரது முகவர் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளில் திருப்தி இல்லையெனில் தேர்தல் நடத்தும் விதிகள் 1961, விதி 63 கீழ் மறு வாக்கு எண்ணிக்கை கோர முடியும்.

அந்த வேட்பாளர் குறிப்பிட்ட சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகள் அல்லது தபால் வாக்குகளில் தவறு நடந்துள்ளது என்பதற்கான தகுந்த ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அதன்பின்னர் அனைத்துச் சுற்றுகளும் முடிந்து, தேர்தல் அதிகாரி முடிவுகளைத் தொகுத்தவுடன், முறையாகப் படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உதாரணமாக 100க்கும் குறைவான வாக்குகள் வெற்றி தோல்வி இருக்கும்போது, பொதுவாக மறு எண்ணிக்கைக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு. ஆனால் மறு எண்ணிக்கை கோரிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் தேர்தல் நடத்தும் அலுவலரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது.

அதேபோல் ஒரு வேட்பாளரின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் சட்டப்பூர்வ ஆவணமான படிவம் 21C என்ற சான்றிதழை பெறுவது அவசியம். ஏனெனில் இதுவே நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அத்தாட்சி.

அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற வேட்பாளர், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தனது தேர்தல் செலவு கணக்குகளை முறையாகத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க தவறினால், வெற்றி செல்லாததாக அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் மே 4-ல் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? - தலைமை தேர்தல் அதிகாரி விரிவான விளக்கம்..!
Vote counting centre

ஜனநாயகத் திருவிழாவில், வாக்கு எண்ணிக்கை என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல, அது மக்களின் தீர்ப்பு.

logo
Kalki Online
kalkionline.com