இலவச மின்சாரம் வேண்டுமா..? உடனே இந்த திட்டத்திற்கு விண்ணப்பீங்க..! ரூ.78,000 மானியமும் உண்டு..!
சூரிய மின்சக்தி என்பது சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு முறையாகும். இது ஒரு புதுப்பிக்கத்தக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல் மூலமாகும். சூரிய மின்சக்தி கார்பன் உமிழ்வைக் குறைத்து, பசுமையான எதிர்காலத்திற்கு பங்களிக்க உதவுகிறது. மேலும் இத்திட்டம் நீண்ட கால மின் கட்டணச் செலவுகளைக் குறைத்து, சேமிப்புக்கு உதவுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி , இந்தியாவின் நிலையான வளர்ச்சியையும், மக்கள் நலனையும் அதிகரிக்க ‘பிரதம மந்திரி சூரிய சக்தி-இலவச மின்சார திட்டம்’ என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீட்டு மாடியில் சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவி சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
இதன் வாயிலாக, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு, 15,000 முதல் 18,000 ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும். மேலும், உபரியாக உள்ள மின்சாரத்தை, மாநில மின்சார வாரியத்துக்கும் விற்கலாம்.
சூரிய மின்தகடுகளை வீடுகளில் அமைக்க, மத்திய அரசு மானியம் அளிக்கிறது. இந்த மானியம், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதுடன், அதிக சலுகையுடன் கூடிய வங்கிக் கடனும் கிடைக்கிறது. மக்களுக்கு அதிக பாரம் இல்லாத வகையில், இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைவரும், அனைத்து நிறுவனங்கள், மின்சார வாரியங்கள் அடங்கிய, ஒருங்கிணை தேசிய ஆன்லைன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தில் வெயிலின் கொடுமையால் மக்கள் அதிகளவு மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதன் காரணமாக மின்சாரக் கட்டணங்கள் உயர்வது ஒன்றும் புதிய விஷயமில்லை. மக்களிடையே ஏர் கண்டிஷனர்கள், மிக்சி, வாஷிங் மிஷின்கள், குளிர்சாதனப் பெட்டிகள், தண்ணீர் பம்புகள் போன்றவற்றின் தேவையும் அதிகரித்து கொண்டே வருவதால் மின் நுகர்வு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரிக்கின்றது. இதற்கான ஒரு நீடித்த தீர்வாக மக்கள் தற்போது கவனம் செலுத்துவது கூரை சூரிய மின்சக்தி (Rooftop Solar – RTS) அமைப்புகள்தான்.
இந்த திட்டத்தால், மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் மின்சார பில் குறைவதுடன், கூடுதல் வருவாயையும் பெற முடியும். மத்திய அரசின் PM சூர்யா கர் யோஜனா திட்டத்தின்கீழ், அதிகபட்சம் ரூ.78,000 வரை மானியம் பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
* https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில், சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பம் என்பதில் பதிவு செய்ய வேண்டும்.
* அதில், உங்களுடைய மாநிலம், மின் சேவை அளிக்கும் நிறுவனம், உங்களுடைய மின்சார எண், மொபைல்போன் எண், இமெயில் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
* இவ்வாறு பதிவு செய்தவுடன், மின்சார எண் மற்றும் செல்போனை பயன்படுத்தி, இணையதளத்தில் உள்ளே சென்று, சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்
* மின்சேவை அளிக்கும் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கவும். உங்களுடைய வீட்டில் நிறுவுவதற்கு சாத்தியமுள்ளது என்று ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், மின்சார வாரியத்தில் பதிவு செய்துள்ள எந்த ஒரு நிறுவனத்தின் வாயிலாகவும், சூரிய மின்தகடுகளை நிறுவலாம்.
* அவ்வாறு மின்தகடுகளை நிறுவிய பின், அது தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, மீட்டருக்காக விண்ணப்பிக்கவும்.
* மீட்டர் நிறுவப்பட்டு, மின்சேவை வழங்கும் நிறுவனம் ஆய்வு செய்து, இணையதளத்தில், மின்சார உற்பத்தி செய்வதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும். இவ்வாறு சோலார் மின்தகடு நிறுவியதற்கான அறிக்கை உருவாகும்.
* அதன்பின், நீங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும், ரத்து செய்யப்பட்ட காசோலையையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.30 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் மானியம் கிடைக்கும்.
சமீபகாலமாக நகரங்களிலும், கிராமபுறங்களிலும் சூரிய மின்சக்தியை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதை அமைக்க ஆரம்ப முதலீடு சற்றே அதிகமாக இருந்தாலும், சில ஆண்டுகளில் அந்த செலவை மீட்டெடுத்து விடமுடியும். அதற்குப் பிறகு வரும் ஆண்டுகளில் மின்சாரச் செலவில் கணிசமாக சேமிக்க முடியும் என்பதால் மக்கள் சூரிய மின்சக்தி அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
