

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரசுப் பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளிகளில் தான் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பள்ளி கல்வித்துறையால் ‘முன்னாள் மாணவர்களை தூதுவர்களாக நியமிக்குப் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 26,221 முன்னாள் மாணவர்கள் தூதுவர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள், இந்தத் திட்டத்தில் இணைந்து செயலாற்ற வேண்டும் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.
முன்னாள் மாணவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தால், தூதுவர்கள் திட்டத்தில் இணைய முடியாது. பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் முன்னாள் மாணவர்கள் தூதுவர்களாக தேர்வு செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் இந்தத் திட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
தூதுவர்கள் திட்டத்தின் நோக்கம்:
* சமூகத்தில் உயர் நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக தூதுவர்களாக நியமித்தல்.
* பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
* முன்னாள் மாணவர்களுக்கும், பள்ளிக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துதல்.
தூதுவர்களின் பணிகள்:
* பள்ளியின் சாதனைகள், தேவைகள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது.
* பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி மற்றும் நன்கொடைகளை திரட்டுதல்.
* தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்குதல்.
* பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
பதிவு செய்யும் முறை:
‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியின்’ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னாள் மாணவர்கள் https://nammaschool.tnschools.gov.in/ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் மாணவர்கள் பெயர், படித்த கல்வியாண்டு, பள்ளியின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
முதற்கட்டமாக, நூற்றாண்டு கடந்த பள்ளிகளில், சாதனை படைத்த மற்றும் உயர் நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் தூதுவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களின் ஆலோசனையோடு தூதுவர்கள் தேர்வு செய்யப்படுவர். சமூக பொறுப்பு, பொருளாதாரம், அரசியல் சார்பின்மை அற்ற மற்றும் அரசுப் பள்ளிகள் மீது அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர், பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு துணை நின்றால், தமிழ்நாட்டில் புதியதொரு கல்வி புரட்சியே உருவாகும்.
பல கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையானது ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது. இந்நிலையில் தூதுவர்கள் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதோடு, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டு (2026-2027) தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருக்கும் சூழலில், தூதுவர்கள் திட்டம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.