

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர், அமைதி ஒப்பந்தத்தின்படி கடந்த மாதம் தான் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் பதற்றம் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
சுமார் 125 டாலர்கள் வரை விற்பனையான ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, போர் முடிவுக்கு வந்ததும் 100 டாலருக்கும் கீழே சரிந்தது. போர் முடிவுக்கு வந்து, ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது.
போர் முடிவுக்குப் பின் இந்தியாவைச் சேர்ந்த 9 எண்ணெய்க் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. மேலும் 15 கப்பல்கள் விரைவில் இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 8 ரூபாய் வரை உயர்ந்தது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியாவில் உள்ள நயாரா பெட்ரோல் பங்குகளில் மட்டும் பெட்ரோல் விலை 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.
ஆனால் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்னும் குறைக்கவில்லை. இந்நிலையில் கச்சா எண்ணெயின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்தால் மட்டுமே பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடுத்த 3 மாதங்களுக்கு நீடித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்.
பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பதன் மூலம் மைலேஜ் சற்று குறையலாம். தேவையான அனைத்து சோதனைகளையும் செய்து முடித்த பின்னரே, எத்தனால் கலப்பு 20 இலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி மற்றும் உயிரி கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்குவதற்கு முன்பு வரை ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 65 முதல் 70 டாலர் வரையே விற்பனையானது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்கள் விலையும் தடாலடியாக உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் குறையத் தொடங்கினாலும், பழைய விலைக்கு வந்தால் தான் பெட்ரோல் விலை குறைக்கப்படும்.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும், ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.97-க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல் விலை குறைக்கப்படாது என மத்திய அரசு தரப்பில் தகவல் வெளிவந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே பிரதமர் மோடி, சொந்த வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு பொதுப் போக்குவரத்துகளை மக்கள் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.