

முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (HUL) நிறுவனம் சர்ஃப் எக்செல் (Surf Excel), ரின் (Rin) மற்றும் வீல் (Wheel) உள்ளிட்ட பிரபலமான துணி துவைக்கும் சோப்புகள் மற்றும் பவுடர்கள் உள்பட வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள் வரிசையில் உள்ள பல பொருட்களின் சில்லறை விலையை 11% வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது. மூலப்பொருள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைச் சமாளிக்க இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இனிமேல் பொதுமக்கள் துணி துவைப்பதற்கான செலவு அதிகரிக்கும்.
மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளின் தொடர் விலை உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு, துணி துவைக்கும் சோப்புகள் மற்றும் பவுடர்களின் விலை உயர்வும் இப்போது கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத வீட்டு உபயோகப் பொருட்களின் இந்த திடீர் விலை அதிகரிப்பு நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை கடுமையாகப் பாதித்துள்ளது.
ஏற்கனவே அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை ஏற்கனவே உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் பவுடர்களின் விலையும் உயர்ந்துள்ளது குடும்ப நிர்வாகத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
சோப்பு தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களின் (Chemicals and Palm fatty acid) விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததே இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம் என ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த மாதம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரியா நாயர் மூலப்பொருள் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, நிறுவனம் தொடர்ந்து விலையைச் சீரமைத்து உயர்த்தும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை மாற்றங்கள் பல்வேறு பேக் அளவுகளை உள்ளடக்கியுள்ளன, மேலும் விலை உயர்வுகள் பேக் அளவுகளைப் பொறுத்து, விலைகள் 1 ரூபாய் முதல் ரூ. 10 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
விலை உயர்வு விவரங்கள்:
சர்ஃப் எக்செல் குவிக் வாஷ் (Surf Excel Quick Wash): 1 கிலோ பாக்கெட் விலை ₹235-ல் இருந்து ₹245 ஆகவும் (₹10 உயர்வு), 500 கிராம் பாக்கெட் விலை ₹123-ல் இருந்து ₹128 ஆகவும் உயர்ந்துள்ளது.
சர்ஃப் எக்செல் ஈஸி வாஷ் (Surf Excel Easy Wash): 1 கிலோ பாக்கெட் விலை ₹167-ல் இருந்து ₹172 ஆகவும் (₹5 உயர்வு), அரை கிலோ பாக்கெட்டின் விலை 85 ரூபாயில் இருந்து ரூ. 87 ஆக 2 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்ஃப் எக்செல் பார்: 250 கிராம் சோப்பு விலை ₹3 உயர்ந்து ₹45 ஆகவும், தலா 200 கிராம் கொண்ட 4 சோப்பு கட்டிகளைக் கொண்ட சர்ப் எக்செல் பேக் 145 ரூபாயில் இருந்து ரூ. 155 ஆக, ரூ. 10 உயர்ந்துள்ளது.
ரின் (Rin): நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிக்கனமாகச் செலவு செய்பவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ரின் மற்றும் வீல் தயாரிப்புகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ரின் ஆலா (Rin Ala 500 ml) 500 மில்லியின் விலை ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.95 ஆகவும், 1 கிலோ ரின் துணி சோப்பு பவுடர் விலை ₹3 உயர்ந்து ₹123 ஆகவும், 500 கிராம் பாக்கெட் விலை ₹2 உயர்ந்து ₹63 ஆகவும் உயர்ந்துள்ளது.
வீல் (Wheel): வீல் டிடர்ஜென்ட் பவுடர் (துணி பவுடர்) 1 கிலோவின் விலையை ரூ.3 உயர்த்தி ரூ.93 ஆக நிர்ணயித்துள்ளது, மேலும் அதன் 500 கிராம் பேக்கின் விலை முன்பு ரூ.46 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.47 ஆக உயர்ந்துள்ளது.
மோதி குலாப் சோப் (Moti Gulab soap): துணி துவைக்கும் பவுடர்கள் மட்டுமில்லாமல் குளியல் சோப்புப் பிரிவில் உள்ள மோதி குலாப் சோப்பின் விலையையும் HUL நிறுவனம் உயர்த்தியுள்ளது. 150 கிராம் கொண்ட ஒரு சோப்பின் விலை 74 ரூபாயில் இருந்து ரூ. 82 ஆக அதிகரித்துள்ளது. இது 10 சதவீதத்திற்கும் அதிகமான விலை உயர்வாகும்.
உற்பத்திச் செலவு உயர்வைக் கையாளவும், அதே வேளையில் போட்டி நிறைந்த சந்தையில் விற்பனை அளவிலான வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனங்கள் பல்வேறு தயாரிப்பு வகைகளிலும் விலைகளை மாற்றியமைத்து வரும் சூழலில் இந்த புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் விலை உயர்வு நுகர்வோரின் வாங்கும் திறனைக் குறைப்பதுடன், தங்களின் அன்றாடச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும் அவர்களைத் தள்ளியுள்ளது