
அமெரிக்க மல்யுத்த போட்டிகளில் 1980களில் பெரிதும் கோலோச்சியவர் ஹல்க் ஹோகன் , இவரை மல்யுத்த போட்டிகளின் சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். 1953 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் உள்ள அகஸ்டாவில் டெர்ரி ஜீன் போல்லியா என்ற இயற்பெயருடன் ஹல்க் ஹோகன் பிறந்தார். பின்னர் புளோரிடா மாநிலத்தின் போர்ட் டம்பாவில் வளர்ந்தார். சிறு வயதில் இருந்தே டெர்ரி ஜீனுக்கு மல்யுத்தம் மீது அதீத ஆர்வம் இருந்தது. மல்யுத்தத்தில் பயிற்சி பெற்று 1977 ஆம் ஆண்டு தொழில் ரீதியான மல்யுத்த வீரராக களமிறங்கினார்.
1984 ஆம் ஆண்டு தி அயர்ன் ஷேக்கை வீழ்த்தி WWE சாம்பியன்ஷிப்பை டெர்ரி ஜீன் வென்றதிலிருந்து அமெரிக்கா முழுக்க பிரபலமாக தொடங்கினார். பின்னர் ஹல்க் ஹோகன் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார். மேலும் தி ஹல்க்ஸ்டர், ஹாலிவுட் ஹோகன், ஹல்க் மேனியா, தண்டர் லிப்ஸ், டெர்ரி போல்டர், ஸ்டெர்லிங் கோல்டன், தி சூப்பர் டிஸ்ட்ராயர், ஹல்க் போல்டர், ஹல்க் மெஷின் போன்ற பல சிறப்புப் பெயர்களையும் பெற்றிருந்தார்.
1987 ஆம் ஆண்டு ஹோகன் அதுவரை தோல்வி அறியாத பிரான்ஸ் மல்யுத்த வீரர் ஆண்ட்ரே தி ஜெயன்ட்டுடன் மோதினார்.ஆண்ட்ரே 7'4 அடி உயரமும் 260 கிலோ எடையும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான வீரர் , அவருடன் ஹல்க் ஹோகன் கடுமையாக சண்டையிட்டு , இறுதியில் அவரை தனது தலைக்கு மேலே தூக்கி தரையில் எறிந்து வெற்றி பெற்றது , வரலாற்றில் மைல் கல்லாக இருக்கிறது. அதன் பின்னர் ஹோகனின் புகழ் உச்சியை தொட ஆரம்பித்தது.
1990 - 91 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியான ராயல் ரம்பிள் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மல்யுத்த வீரரானர். அவர் 6 WWE சாம்பியன்ஷிப்புகளை வென்ற சாதனையாளர்.1993 ஆம் ஆண்டில், ஹோகன் WWE ஐ விட்டு வெளியேறி உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில் (WCW) இணைந்தார். அதிலும் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை ஆறு முறை வென்றார். பின்னர் WWE க்கு மீண்டும் திரும்பினார்.
2005 ஆம் ஆண்டு ஹோகன் WWE ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார், பின்னர் 2020 இல் நியூ வேர்ல்ட் ஆர்டர் மல்யுத்தக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
மல்யுத்தத்தில் புகழ் பெற்றிருந்ததால் சில ஹாலிவுட் பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது. 1982 ஆம் ஆண்டு புகழ்பெற்ற ராக்கி 3 திரைப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் அவர் நோ ஹோல்ட்ஸ் பாரெட் (1989), சபர்பன் கமாண்டோ (1991) மற்றும் மிஸ்டர் நானி (1993) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஹோகன் நோஸ் பெஸ்ட், தண்டர் இன் பாரடைஸ், மற்றும் சீனா, இல்லினாய்ஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஹல்க் சகப் போட்டியாளராக இருந்த டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தார்.
சமீப காலமாக பின் கழுத்து வலி , தோள்பட்டை வலி ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஹல்கிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை ஜூலை 24 அன்று அதிகாலையில் புளோரிடாவின் கிளியர்வாட்டரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
ஹோகனின் மறைவுக்கு உலக மல்யுத்த பொழுதுபோக்கு (WWE) அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் , ஹல்க் ஹோகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரரும் , ராக் என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், ஹோகனை தனது "குழந்தைப் பருவ நாயகன்" என்று குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். அமெரிக்க மல்யுத்தத்தின் ஒரு ஜாம்பவான் வீரர் விண்ணுலகம் எய்தியுள்ளார்.