
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, இந்தியாவின் ஆகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர். இந்திய அணிக்காக 3 உலகக்கோப்பைகளைப் வென்று கொடுத்த தோனிக்கு, இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான கதை தான். தோனி இந்திய அணிக்குள் வருவதற்கு முன்பு வரை, விக்கெட் கீப்பர்களை யாரும் வெகுவாக புகழ்ந்தது இல்லை. ஆனால் திறமையான விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டார். தோனி இந்திய அணியில் இடம் பிடித்தது குறித்து சுவாரஸ்யமான தகவலைத் தற்போது முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார். 2003 காலகட்டத்தில் பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பிய டிராவிட், இனி கீபபிங் செய்ய மாட்டேன் என முடிவெடுத்தார். அவரது அந்த முடிவு தான் தோனிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க மிக முக்கிய காரணமாக அமைந்தது. அதேசமயம் தோனி கென்யாவில் அசுரத்தனமான பேட்டிங்கை விளையாடி, பிசிசிஐ கவனத்தை ஈர்த்தார். பேட்டிங்கில் புதுமையைப் புகுத்திய தோனியின் பவரான சிக்ஸர்கள் தான் அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி ஒரு வீரரை இந்திய அணியில் சேர்த்தால், இந்திய அணிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் எனத் தேர்வுக்குழு அவரை அணியில் இணைத்தது.
தேர்வுக்குழுவின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார் தோனி. அதோடு 3 உலகக்கோப்பைகளை வென்று சாதனையும் படைத்தார். தோனி விக்கெட் கீப்பராக அறிமுகமான பின்பு, மற்ற சில விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க வீரர் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக். இந்திய அணியில் தோனிக்கு நிரந்தர இடம் கிடைக்கவே, விருந்தினர் போல் எப்போதாவது தான் தினேஷ் கார்த்திக்கை அணியில் பார்க்க முடிந்தது.
கடந்த சில ஆண்டுகளில் டி20 போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வானார். உலகக்கோப்பையில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் சரியாக விளையாடாததால் அதோடு அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்து விட்டது. ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக், தற்போது வர்ணனையாளராகவும், பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணியில் தோனி இடம்பெற்றது குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த தினேஷ் கார்த்திக், தற்போது சுவாரஸ்யமான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தொடக்க காலத்தில் தோனி விளையாடிய போட்டிகளை நான் பார்த்தது இல்லை. ஆனால் கென்யாவில் இந்திய ஏ அணிக்காக தோனி விளையாடியதை அனைவரும் புகழ்ந்தனர். பெரிய சிக்ஸர்கள் அடிக்கும் கேரி சோபர்ஸ் உடன் தோனியை ஒப்பிட்டு பேசினர். ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு நான் தான் விகஅகெட் கீப்பராக இருந்திருக்க வேண்டும். ஆனால் தோனியின் பவர்ஃபுல்லான சிக்ஸர்கள் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க காரணமாக இருந்தது.
காலப்போக்கில் இந்திய அணியில் நிரந்தர வீரராக தோனி உருவெடுக்கவே, என்னை விருந்தினர் போல் இந்திய அணியில் சேர்த்துக் கொண்டனர். திரைப்படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் நடிகர்கள் போல நான் இந்திய அணியில் நான் வந்தேன். ஆனால் முதன்மைக் கதாபாத்திரம் தோனி தான்” என தினேஷ் கார்த்திக் கூறினார்.