
ஒரு நாட்டின் வளர்ச்சி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) வைத்து தான் மதிப்பிடப்படுகிறது. பொருளாதார அளவில் எந்த நாடு முன்னணியில் இருக்கிறது என்பது, அந்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைச் சார்ந்தது. எந்தெந்தத் துறைகளில் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்பதை அறிவதற்கும் ஜிடிபி முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. அவ்வகையில் ஒரு நாட்டிற்கு ஜிடிபி ஏன் அவசியம் மற்றும் தற்போது உலக நாடுகளின் டாப் 10 ஜிடிபி பட்டியலை அலசுகிறது இந்தப் பதிவு.
ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நாட்டில் தயாரிக்கிப்பட்ட ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு தான் உள்நாட்டு உற்பத்தி. ஏற்றுமதி அதிகமாக இருந்து, இறக்குமதி குறைவாக இருந்தால் அந்நாட்டின் ஜிடிபி அதிகமாக இருக்கும். இதற்குச் சான்றாக அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளைக் கூறலாம். அதுவே இறக்குமதி அதிகமாக இருந்து ஏற்றுமதி குறைவாக இருந்தால், அந்நாட்டின் ஜிடிபி குறைவாக இருக்கும். இதற்குச் சான்றாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் இந்தியா போன்ற நாடுகளைக் கூறலாம்.
நடுத்தர வருவாய் கொண்ட இந்தியாவில், மக்கள் தொகை அதிகரிப்பும் ஜிடிபி குறைவதற்கான முக்கிய காரணமாகும். கொரோனா காலகட்டத்தில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் ஜிடிபி பெரும் சரிவை சந்தித்தது. இதிலிருந்து மீண்டு வர இந்தியாவிற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கணித்தனர். ஆனால் இந்த கணிப்புகளை எல்லாம் உடைத்தெறியும் வகையில், இந்தியா தனது பொருளாதார சரிவை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தது. இந்தியாவில் காலாண்டுக்கு ஒருமுறை என ஆண்டிற்கு 4 முறை ஜிடிபி கணக்கிடப்படுகிறது. இதுதவிர்த்து ஓராண்டுக்கான ஜிடிபியும் கணக்கிடப்படுகிறது.
நுகர்வுச் செலவுகள், அரசின் செலவுகள், முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிகர ஏற்றுமதி ஆகிய நான்கின் மூலம் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. ஒரு நாட்டின் ஜிடிபி தரவுகளைப் பொறுத்து தான், அரசு மற்றும் தனிநபர்கள் தொழில்துறை மற்றும் பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்ட சில முடிவுகளை எடுக்கின்றனர். ஒரு நாட்டின் ஜிடிபி அதிகமாக இருந்தால், அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது என்றும், அரசின் திட்டங்கள் அனைத்தும் அடிமட்ட மக்கள் வரை சென்றடைகிறது என்றும் அர்த்தம். அதுவே ஜிடிபி குறைவாக இருந்தால், பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கும் திட்டங்களில் அந்நாடு ஈடுபட வேண்டும் என்று அர்த்தம்.
ஜிடிபி வளர்ச்சி அதிகமாகும் நேரங்களில் தான் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் உயரும். ஒருவேளை ஜிடிபி சரிந்தால் முதலீடு மற்றும் சேவைகள் அனைத்தும் குறையும். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். ஒரு நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசு, எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவதற்கும் ஜிடிபி தரவுகள் உதவுகின்றன.
2024 ஆம் ஆண்டு முடிவில் எந்த நாடு உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளின் பட்டியலை சர்வதேச செலாவணி நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டது. இதில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
அமெரிக்கா: 30.34 டிரில்லியன் ($).
சீனா: 19.53 டிரில்லியன் ($).
ஜெர்மனி: 4.92 டிரில்லியன் ($).
ஜப்பான்: 4.39 டிரில்லியன் ($).
இந்தியா: 4.27 டிரில்லியன் ($).
பிரிட்டன்: 3.73 டிரில்லியன் ($).
பிரான்ஸ்: 3.28 டிரில்லியன் ($).
இத்தாலி: 2.46 டிரில்லியன் ($).
கனடா: 2.33 டிரில்லியன் ($).
பிரேசில்: 2.31 டிரில்லியன் ($).