தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கவனத்தில் கொண்டு மக்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் தற்போதே பல்வேறு கட்ட தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. அந்த வகையில் வரவுள்ள சட்டசபை தேர்தலுக்கு 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக ஒரு அணியும், அதிமுக மற்றொரு அணியும், நடிகர் விஜயின் தவெக இன்னொரு அணியும், சீமானின் நாதகவும் களம் காண இருக்கின்றன. இதனால் இந்தாண்டு தேர்தல் களம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டசபை தேர்தல் களம் இறங்க உள்ளது. முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பல ஊர்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அதற்கு முன்னேற்பாடாக மாநில மாநாடு, நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், சுற்றுப்பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்று வருகிறார். கரூர் சுற்றுப்பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதன் பிறகு ஒருமாதம் வரை அமைதியாக இருந்த விஜய் மீண்டும் நிர்வாகிகள் கூட்டம், சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அதுமட்டுமின்றி அதிமுகவை சேர்ந்த செங்கேட்டையன், நாஞ்சில் சம்பத் இருவரும் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர்.
புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன்பு கூட்டம் நடந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து வரும் 18-ம்தேதி விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் செய்து வருகிறார்.
அந்தவகையில், தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் செய்யாத புதுமையாக, தமிழக அரசியல் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் பொறுப்பாளர்களுக்கு அவர்களது விவரங்களை உள்ளடக்கிய ‘கியூஆர்’ குறியீடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை கடந்த மாதம் ஒரு லட்சம் பொறுப்பாளர்களுக்கு வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தமட்டில் இதுவரையிலும் பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் நீட்சியாக, 2-ம் கட்டமாக 1,00,231 பேருக்கு ‘கியூஆர்’ குறியீடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் விஜய் வழங்கி உள்ளார்.
ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பொறுப்பாளர்களில் இதுவரைக்கும் 2,02,334 பொறுப்பாளர்களுக்கு ‘கியூஆர்’ குறியீடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு லட்சம் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதால் வரும் சட்டசபை தேர்தலில் தவெக கட்சிக்கு குறைந்த பட்சம் 3 லட்சம் பொறுப்பாளர்களின் ஓட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.