
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை பெற சில தகுதிகளை அரசு நிர்ணயித்தது. இந்தத் தகுதிகள் பூர்த்தியடையாத பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும் இந்த முகாம்கள் உதவி வருகின்றன. அவ்வகையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த பிறகு, அதற்கான முடிவுகள் எப்போது தெரிய வரும் என பெண்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைமுறைக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், பொதுமக்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இல்லாததால், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு இத்திட்டம் உதவிகரமாக அமைந்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் எப்போது எங்கு நடத்தப்படும் என்ற அறிவிப்பை அவ்வப்போது தமிழக அரசு வெளியிடுவதால், பொதுமக்கள் அரசு சேவைகளை மிக எளிதாக அணுகுகின்றனர்.
ஜூலை 15 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கிய போதே, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தால் முடிவுகள் தெரிய அதிகபட்சமாக 45 நாட்கள் ஆகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ஜூலை 15 ஆம் தேதி விண்ணப்பித்த பெண்களுக்கு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ரூ.1,000 கிடைக்குமா அல்லது கிடைக்காத என்ற முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த நாட்களில் விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள் முடிவுகள் தெரிய வரும். உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ அதற்கான தகவலை குறுஞ்செய்தி வாயிலாக அரசு சார்பில் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால், விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் முழுமையாக ஆராய்ந்த பிறகு தான், முடிவுகளை வெளியிடுவார்கள்.
இதுவரை மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காத பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்குச் சென்று விரைந்து விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை, வங்கி பாஸ்புக், மின் கட்டண ரசீது மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டும் 13,50,000 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.