

"யாராவது தவறாக நடந்து கொண்டால் அவர்களை அந்த இடத்திலேயே அடி" என்ற நடிகை ரேவதியின் அதிரடியான விழிப்புணர்வு பேச்சு தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அஸ்ஸி ஹிந்தி படத்தின் டிரெய்லர் சென்னையில் இரண்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளான ரேவதி மற்றும் கனி குஸ்ருதி முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இந்தப் படத்தில் கனி குஸ்ருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா மற்றும் முகமது ஜீஷன் அய்யூப் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவுடன் நசீருதீன் ஷா, சுப்ரியா பதக் மற்றும் சீமா பஹ்வா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா இயக்கியுள்ள புலனாய்வு நீதிமன்ற கதை பிண்ணனி கொண்ட இப்படம் பிப்ரவரி 20, 2026 அன்று உலகளாவிய திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் 80 களின் கதாநாயகியாக தற்போது சிறந்த குணச்சித்திர நடிகையாக மற்றும் சில படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட ரேவதி, திரைப்படம் குறித்து அளித்த பேட்டியில் " அஸ்ஸி' என்பதற்கு தமிழில் 80 என்று அர்த்தம். ஒவ்வொரு நாளும் இந்தியாவில், பெண்களுக்கு எதிராக குறைந்தபட்சமாக 80 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், எப் ஐ ஆர் போடப்படாத வழக்குகள் பல இருக்கிறது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள். அதை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தினுடைய கதையே பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய பயணத்தை பற்றிதான்.
தவறான எண்ணத்தில் ஒருவர் தொட்டால் அதை தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்பதை தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். பல பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை வெளியில் சொல்ல பயந்து அதை மனதுக்குள் வைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு பெண்ணின் உடலை ஒருவன் தவறாக தொடுவதை, அந்த பெண்ணால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ரணமாகிவிடும். இதனால், இதுபோன்ற நேரங்களில் பெற்றோர், குழந்தைகளுக்கு துணையாக இருக்க வேண்டும்.
யாராவது தவறாக நடந்து கொண்டால் அவர்களை அந்த இடத்திலேயே அடி என்று சொல்லி கொடுக்க வேண்டும். நான் பதினொன்றாவது படித்துக் கொண்டிருக்கும் போது பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான். நான் யாருக்கும் பயப்படவில்லை அவனை அந்த இடத்திலேயே பளார் என அறைந்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்கு துணையாக இருந்தார்கள். அந்த தைரியத்தை எனக்கு தந்தது என் அம்மா. யாராவது தவறாக நடந்து கொண்டால் பயப்படாமல் தைரியமாக அடி என்றார்கள் அதைத்தான் நான் அந்த செய்தேன் இதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும்" என்று கூறியிருப்பதை பலரும் வரவேற்கின்றனர்.
பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் இன்றைய சமூக சூழலில் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் அனுபவமிக்க பெண்மணியாக ரேவதியின் பேச்சு அவரது சமூக அக்கறையைக் காட்டுவதாக உள்ளது.