
நாடு முழுக்க தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (அக்டோபர் 20) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நாளாக ஆண்டுதோறும் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று அக்டோபர் 18 தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தந்தேரோஸ் பண்டிகையின் போது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கினால், குடும்பத்தில் செல்வ செழிப்பு கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உயர்ந்து வருகிறது. வெகு விரைவில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விடும்.
சாதாரண மக்களுக்கு தங்கம் இனி எட்டாக்கனியாகவே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க தங்கத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய இ-காமர்ஸ் தளங்கள் போட்டி போட்டு வருகின்றன.
மின்னணு சாதனங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வரிசையில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்க முடியும். பிளிங்கிட் (Blinkit), இன்ஸ்டாமார்ட் (Instamart), ஸ்விகி (Swiggy), பிக் பாஸ்கெட் (BigBasket) மற்றும ஜெப்டோ (Zepto) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தங்கத்தை பண்டிகை காலங்களில் விற்பனை செய்ய முன்வந்துள்ளன.
நாட்டில் MMTC-PAMP என்ற தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு நிலையம் மட்டும் தான் LBMA அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஆன்லைனில் தங்கத்தை விற்பனை செய்ய பிளிங்கிட் தளம், MMTC-PAMP நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி 999.9+ தூய தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்பட வெள்ளி பார்களும் விற்பனை செய்யப்படும். ஆன்லைன் விற்பனை என்பதால், ஆர்டர் செய்த 10 முதல் 20 நிமிடங்களில் வீடடுக்கே டெலிவரி செய்யப்படும்.
பிளிங்கிட் தளத்தின் மூலம் 1 கிராம் லோட்டஸ் கோல்ட் பார், 0.5 கிராம் லோட்டஸ் தங்க நாணயம் மற்றும் 10 கிராம் லட்சுமி கணேஷ் வெள்ளி நாணயத்தை வாடிக்கையாளர்கள் எளிதாக ஆர்டர் செய்யலாம். MMTC-PAMP நிறுவனத்தின் பாதுகாப்பு வழிமுறைகளை பிளிங்கிட் நிறுவனம் பின்பற்றி வருவதால், டெலிவரி முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த டெலிவரியில் சேதமில்லாத பேக்கேஜிங் மற்றும் திறந்த பெட்டி விநியோகம் உள்ளிட்டவையும் அடங்கும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பேக்கேஜிங்கை திறந்து பார்த்து, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு பணம் செலுத்தலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் விலை நேரம் மற்றும் விற்பனை செய்யும் ஆன்லைன் தளங்களைப் பொறுத்து வேறுபடும். தங்க நாணயங்கள் ஜெப்டோ தளத்தில் ரூ.13,784-க்கும், இன்ஸ்டாமார்ட் தளத்தில் ரூ.13,871-க்கும், பிளிங்கிட் தளத்தில் ரூ.13,949-க்கும், பிக் பாஸ்கெட் தளத்தில் ரூ.14,046-க்கும் கிடைக்கிறது. ஆன்லைன் தங்க டெலிவரிக்கு இ-காமர்ஸ் தளங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருந்து கொண்டே வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து எளிதாக வாங்கலாம். இந்த வசதி பண்டிகை கால ஷாப்பிங்கை வாடிக்கையாளர்களுக்கு இன்னும் வசதியாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.