ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் செல்ல இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா பாடலுக்கு இன்றும் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்தக் காலத்து ஆட்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை அனைவருக்குமே இவரின் பாடல் ஒரு மருந்து என்றே கூறலாம். இவருடைய பாடல்களை கேட்டுத் தூங்கும் இளைஞர்கள் ஏராளம். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும். அதுவும் இசை மூலமே நம்முடைய உணர்வுகளை மாற்றும் திறன் இவரின் பாடல்களுக்கு உண்டு. இசையில் ஊறிப்போன இவர் வரிகளைக் கொடுப்பதிலும் சிறந்தவர்தான்.
அந்தவகையில் இவர் இசையமைத்த பாடல்தான் திவ்ய பாசுரம். இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் நாட்டியஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவும் மாநிலங்களவை உறுப்பினரும் கலந்துக்கொண்டனர். இருவரையும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அவர் அருகே வந்த ஜீயர்களும் பட்டர்களும் அவரை அங்கேயே நிற்குமாறு கூறிவிட்டனர்.
அந்த மண்டப நுழை வாயிலுக்கு வாசலிலேயே இளையராஜாவிற்கு மரியாதை செலுத்தினர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.
இளையராஜாவை மண்டபத்திற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியதற்கு பெரிய அளவி சர்ச்சை ஏற்பட்ட நிலையில், கோவில் நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. ஆண்டாள் கோயில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறை போலவே பாவித்து வருவதாகவும், அங்கு ஜீயர்களைத் தவிர பொதுமக்களுக்கு கூட அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
ஜீயர்கள் உள்ளே நுழைந்தபோது தவறுதலாக இளையராஜாவும் உள்ளே நுழைந்ததாகவும் தாங்கள் அவரிடம் நினைவிக்கூரும் வகையிலேயே அவரைத் தடுத்தோம்.” என்று கூறியுள்ளார்கள்.
இதுபோல தெரியாமல் உள் நுழைவதும், அதை அவர்கள் தடுப்பதெல்லாம் சகஜம்தான். அதை இளையராஜாவே பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், வெளியிலிருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், காலையிலிருந்து இதுகுறித்தான செய்திகள்தான் சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் பேசப்பட்டு வருகின்றன.