
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் அண்டை நாடான மியான்மரிலும், தாய்லாந்து நாட்டிலும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 என்று ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நில நடுக்கத்தில் மியான்மரில் மட்டும் இதுவரை 2000 பேர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மசூதிகளில் தொழுகை நடத்திய 700 இஸ்லாமியர்களும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் கடுமையாக மியான்மர் மற்றும் தாய்லாந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு என்பதாலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடாக இருப்பதாலும் அதனால் மற்ற நாடுகளுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் அங்கு குறைவு தான். ஆனால், தாய்லாந்து பல துறையில் வளரும் நாடாக இருப்பதாலும், சுற்றுலா துறையில் முக்கிய நாடாக இருக்கும் காரணத்தினாலும் அதன், பொருளாதாரத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. மியான்மர் - தாய்லாந்து பூகம்பம் இந்திய வணிகங்களுக்கு கோடிக்கணக்கான இழப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் அதிக பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நாடுகளுடன் வலுவான வர்த்தகத்தை அந்த மாநிலம் அதிகளவில் கையாளுகிறது. மருந்துகள், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் ஆகிய ஏற்றுமதி வணிகங்கள், நிலநடுக்கத்தினால் ஏற்படும் உள்கட்டமைப்பு சேதம் மற்றும் தகவல் தொடர்பு சவால்கள் காரணமாக வணிகம் தேக்கமடைந்துள்ளது. இதனால், ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று வணிகர்கள் கவலை கொள்கின்றனர்.
குஜராத் மாநிலம் மியான்மர் மற்றும் தாய்லாந்துடன் நீண்டகால பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளது. ஜவுளி, மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் மற்றும் சாயப் பொருட்கள் முக்கிய ஏற்றுமதியாக உள்ளன. குஜராத் ஜவுளி சங்கத்தின் கூற்றுப்படி, இங்கிருந்து துணிகள் மட்டும் ஆண்டு தோறும் ₹600 கோடிகளுக்கு தாய்லாந்துக்கு ஏற்றுமதியாகிறது. துணிகளுக்கு பயன்படுத்தப்படும் சாயப் பொருட்கள் மற்றும் தொழில்துறை இரசாயனங்கள் ஆகியவை ஆண்டிற்கு ₹100 கோடி அளவில் இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அத்தியாவசிய மருந்து பொருட்கள் ₹2100 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மரங்கள், மரப் பொருட்கள் , தளவாட பொருட்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. தற்போது மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பல பகுதிகளில் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளது. இண்டர்நெட் உள்ளிட்ட தொலை தொடர்புகள் சேவை தடைப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் உள்ள வணிகர்களை தொடர்பு கொள்வது தடைப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியில் தாமதங்கள், பொருள் தேக்கம், பணம் பெறுவதில் உள்ள சிக்கல்கள், அதனால் ஏற்றுமதி வணிகர்கள் அடையும் பொருளாதார மந்த சூழல்கள் என பல சவால்களை சந்திக்க உள்ளனர்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள வணிகர்களும் பொருளாதார சிக்கல்களை சந்திக்கலாம். இதனால் அவர்கள் பெற்ற பொருட்களுக்கு உடனடியாக பணம் செலுத்த இயலாத நிலையில் இருப்பார்கள். அதனால், மேலும் புதிய இறக்குமதிகளை செய்ய அவர்கள் தயக்கம் காட்டலாம். சில மாதங்கள் இறக்குமதிகளை வெகுவாக குறைக்க வேண்டிய சூழல்களில் அவர்கள் இருப்பதால் இந்திய வியாபாரிகளும் பாதிப்படைவார்கள்.
இது போன்ற சூழல்களில் மியான்மர் மற்றும் தாய்லாந்துடனான வர்த்தக ஸ்திரத்தன்மையை உறுதி செய்து நிதி இழப்புகளைக் குறைப்பதற்கும், ஏற்றுமதி வணிகர்களுக்கு தற்காலிக நிவாரணங்களை வழங்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் வணிகர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.