தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தலைமையகம் சென்னையில் உள்ளது. இத்துறையானது தமிழ்நாடு அரசின் உள்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. டைரக்டர் ஜெனரல்/ கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் தரத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி, துறையின் தலைவராக உள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 368 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீயணைப்பு துறை தீயை அணைத்தல் மற்றும் தீ தடுப்பு ஆகியவற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து பலரது உயிரை காப்பாற்றும் பணியை இவர்கள் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு துறை தீயை அடக்குதல், மீட்பு நடவடிக்கைகள், அவசர மருத்துவ சேவைகள், சமூகத்திற்குள் பாதுகாப்பு தொடர்பான பணிகளை செய்கின்றன.
அரசுதுறை மற்றும் தனியாரில் வேலைசெய்பவர்களுக்கு வார விடுமுறை, பண்டிகைகால விடுமுறைகள் வழங்கப்படுகிறது. ஆனால் தீயணைப்பு துறையை பொறுத்தவரையில் முக்கியமான பண்டிகை காலங்களில் தான் அவர்கள் முழு நேரமும் மும்முரமாக பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. மேலும், தீ விபத்துகளை பொறுத்தவரையில் எப்போது எங்கே ஏற்படும் என்பது தெரியாது. எங்கிருந்து தீ விபத்து என அழைப்பு வந்தாலும், அழைப்பு வந்த ஒரு நிமிடத்தில் தீயணைப்பு வாகனம் புறப்பட்டுவிடும். அந்த அளவிற்கு எப்போதுமே தயார் நிலையில் இருப்பார்கள் தீயணைப்பு வீரர்கள்.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இதுதவிர, வெள்ளத்தில் சிக்கியவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள், சாலை மற்றும் ரெயில் விபத்துகள் மற்றும் பிற இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளில் சிக்கியவர்கள் என ஏராளமான மக்களை காப்பாற்றி வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த 2024-ம் ஆண்டு நடந்த தீ விபத்துகள், காப்பாற்றப்பட்ட உயிர்கள், பொருட்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக 21 ஆயிரத்து 989 அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன. தீ விபத்துகளில் சிக்கிய 130 பேரை தீயணைப்பு துறையினர் காப்பாற்றி உள்ளனர். 91 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.
மேலும், ரூ.16 கோடியே 55 லட்சத்து 76 ஆயிரத்து 402 மதிப்பிலான வீடுகள், விலை உயர்ந்த பொருட்கள் உள்பட பல்வேறு சொத்துகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது. ரூ.219 கோடியே 57 லட்சத்து 87 ஆயிரத்து 503 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளது.
இதேபோல, அவசர காலங்களில் ஆபத்தான இடங்களில் சிக்கிய மக்கள், செல்லப்பிராணிகள், ஆடுகள், மாடுகள் போன்றவற்றை காப்பாற்றுவதற்காக 80 ஆயிரத்து 275 அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன. வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் பாம்புகள் புகுந்தது குறித்து 58 ஆயிரத்து 415 அழைப்புகளும், தேன் கூடுகள், குழவி கூடுகள் போன்றவற்றால் பிரச்சினை என 8 ஆயிரத்து 163 அழைப்புகளும் வந்துள்ளன. இதில் 42 ஆயிரத்து 851 பாம்புகள் மீட்கப்பட்டு காடுகளில் விடப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி கூறியுள்ளார்.