

உத்தரகாண்டில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, ரிஷிகேஷில் கங்கா தடுப்பணையின் (Ganga Barrage)பசுலோக் பகுதியில், டி ஹாவிலண்ட் கனடா DHC-6 டிவின் ஓட்டர் (De Havilland Canada DHC-6 Twin Otter)ரக நீர் விமானம் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நடத்தியது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு செய்வதன் மூலம், இந்தியாவின் முதல் வணிக நீர்விமானச் சேவைகளைத் தொடங்குவதற்கான ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இத்தகைய சோதனையை வெற்றிகரமாக நடத்திய முதல் மலை மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.
கடல் விமானம் என்பது நீரில் இருந்து புறப்படவும், தரையிறங்கவும், மிதக்கவும் வடிவமைக்கப்பட்ட, இயந்திர சக்தியால் இயங்கும் ஒரு நிலையான இறக்கை கொண்ட வானூர்தியாகும். 19 இருக்கைகள் கொண்ட விமானமான இது நிலத்திலும், நீரிலும் தரையிறங்கி புறப்படும் வசதி கொண்டது.
இந்த வெற்றிகரமான சோதனை, இந்தியாவில் கடல் விமான இணைப்பை விரிவுபடுத்துவதில் அரசாங்கத்தின் பரந்த ஆர்வத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த விமானம் முன்னதாக, தற்போது செயல்படாத நிலையில் உள்ள 'Fly Big' என்ற விமான நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது; பின்னர், தேவையான மாற்றங்கள் மற்றும் சான்றிதழ் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இந்தியாவில் நீர்விமானச் சேவைக்காகப் பயன்படுத்தும் வகையில் இது மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு டர்போபிராப் விமானம், மிதவைகள்( (floats) பொருத்தப்பட்டு நீரில் இயங்கும் விமானமாக மாற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சோதனையை அவானி சிங் தலைமையிலான ஸ்கைஹாப் ஏவியேஷன் நிறுவனம் நடத்தியது.
இந்த சோதனை வெற்றியடைந்ததன் மூலம், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள் மற்றும் அந்தமான், லட்சத்தீவு, தேரி ஏரி போன்ற தொலைத்தூர பகுதிகளுக்கு எளிதாக விமான போக்குவரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் விமான சேவைகள் தீவுகளுக்கு இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, அணுகலை மேம்படுத்தும்.
மேலும் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ், இத்தகைய நீர் விமான சேவைகளை வணிக ரீதியாக தொடங்குவதற்கான அடுத்தகட்ட பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த முன்னேற்றம் குறித்துப் பேசிய SkyHop Aviation-ன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அவனி சிங், "இந்தியாவின் முதல் வணிக நீர்விமான (seaplane) சேவை நிறுவனமாக உருவெடுக்கவுள்ள SkyHop, ரிஷிகேஷில் உள்ள கங்கா தடுப்பணையிலிருந்து (Ganga Barrage) சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது; இதில் விமானம் நீரில் தரையிறங்குவதும், மீண்டும் மேலே எழுவதும் அடங்கும்," என்று கூறினார்.
திட்டத்தின் முதல் கட்டமாக, லட்சத்தீவில் உள்ள ஐந்து தீவுகளை ஒன்றுக்கொன்றுடனும், அதே சமயம் இந்தியப் பெருநிலப்பரப்புடனும் இணைப்பதே தங்களின் திட்டம் என்று சிங் குறிப்பிட்டார்.
மேலும் இந்தத் தனித்துவமான திட்டம், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.