
பாட்னாவின் மகாவீர் புற்றுநோய் சன்ஸ்தான் மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 12 பேர்களைக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு ஆய்வினை மேற்கொண்டது. பீகாரில் உள்ள சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, தர்பங்கா, முங்கர் மற்றும் நாளந்தா உள்ளிட்ட 6 மாவட்டங்களின் கிராமப்புறங்களில் உள்ள 17 முதல் 40 வயதுக்குட்பட்ட 327 பெண்மணிகளிடமிருந்து தாய்ப்பால், இரத்த மாதிரிகள் , சிறுநீர் மற்றும் குழந்தைகளின் இரத்த மாதிரிகள், சிறுநீர் ஆகியவற்றை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.
மேலும் ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்யப்பட்ட மக்கள் குடிக்கும் தண்ணீர், கோதுமை, அரிசி மற்றும் காய்கறிகளையும் சோதனைக்காக சேகரித்தனர். சோதனையின் முடிவில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஆறு மாவட்டங்களில் உள்ள பெண்களின் தாய்ப்பாலில் ஈய நச்சு அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சோதனை முடிவுகளின்படி 92 % தாய்ப்பாலின் மாதிரிகளில் ஈயத்தின் அளவு லிட்டருக்கு 1309 மைக்ரோகிராம் அளவிற்கு இருந்துள்ளது. இது மிகவும் அபாயகரமான அளவாகும்.
ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி அருண்குமார் வெளியிட்ட அறிக்கையில் "இரத்தத்தில் ஈயத்தின் அளவு எப்போதும் அபாயகரமானது. உலக சுகாதார அமைப்பின் படி (WHO) ஈயத்த்தின் அளவு 3.5 µg/dL க்கும் குறைவான அளவில் இருந்தால் கூட அது குழந்தைகளின் நுண்ணறிவு, நடத்தை மற்றும் கற்றல் திறன்களை பாதிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகார் மாவட்ட சோதனைகளில் 87 % பேர் இரத்தத்திலும் ஈயம் கண்டறியப்பட்டது, உச்ச மதிப்பு லிட்டருக்கு 677.2 மைக்ரோ கிராம் ஆகும். இந்த ஈயம் இவர்கள் உண்ணும் உணவில் இருந்து வந்துள்ளது. ஈய செறிவு கொண்ட மண்ணில் உற்பத்தி ஆகும் உணவுப் பொருட்களிலிருந்து பெண்களுக்கு சென்று தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கும் செல்கிறது.
ஈயம் உடலில் கலக்கும் போது கடுமையான நரம்பியல் சேதம், மூளை பாதிப்பு, மன நலம் பாதிக்கப்படுதல், அறிவு மந்தம் போன்றவை ஏற்படும். புதிதாக பிறக்கும் குழந்தைகள் உடல் எடையை பாதிக்கும், அவர்களை மூளை வளர்ச்சி குன்றியவர்களாக்கும். இரத்த சோகை, நரம்பியல், எலும்பு மற்றும் நரம்புத்தசை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பீகார் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான அசோக் குமார் கோஷ் தலைமையிலான குழுவின் ஆய்வு முடிவில் குடிநீரில் ஆர்சனிக் அமிலம் இருப்பதையும் அது தாய்மார்கள் மூலமாக குழந்தைகளை பாதிப்பதையும் முதலில் கண்டறிந்தார். அதன் பின்னரே தாய்ப்பால் மாதிரிகளில் ஈயத்தின் அளவு கண்டறியப்பட்டது.
சோதனை செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் ஒரு கிலோகிராம் கோதுமையில் 7910 மைக்ரோ கிராம் ஈயமும், ஒரு கிலோகிராம் அரிசியில் 6972 மைக்ரோ கிராம் ஈயமும், ஒரு கிலோ கிராம் உருளையில் 13,786 மைக்ரோ கிராம் அளவிலும் உள்ளது. இந்த அளவு மிகவும் உச்சபட்ச அபாயகர அளவையும் தாண்டியுள்ளது.
இந்தியாவில் உள்ள 23 மாநிலங்கள் ஈய நச்சுத்தன்மைக்கான 5 µg/dL வரம்பைத் தாண்டியுள்ளது. பீகாரில் 10.42 µg/dL , உபியில் 8.67 µg/dL , மபியில் 8.32 µg/dL, ஜார்கண்ட்டில் 8.15 µg/dL , சத்தீஸ்கரில் 7.46 µg/dL , ஆந்திரப் பிரதேசத்தில் 7.14 µg/dL என்ற மோசமான அளவில் உள்ளது. ஆண்டு தோறும் ஈய பாதிப்பினால் 165,000 பேர் இறக்கின்றனர். 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் இதிலிருந்து மக்களை மீட்பது பெரிய சவாலாக இருக்கும்.