

13வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன. கடந்த மாதம் தொடங்கிய இத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்றது தென்னாப்பிரிக்கா. பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸ் செய்து இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் இறுதிப் போட்டி இன்று மதியம் 3 மணியளவில் நேவி மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் கோப்பையைக் கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைக் காண ரசிகர்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம். அதுவும் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடுகிறது என்றால் நிச்சயமாக போட்டியைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நேவி மும்பையில் உள்ள மைதானததில் 60,000 பேர் கூடுதவற்கான இட வசதி உள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையை விட அதிகளவிலான ரசிகர்கள் இறுதிப் போட்டியைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழைவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே கடந்த இரண்டு முறையும் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்த நிலையில், இம்முறை நிச்சயமாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தென்னாப்பிரிக்கா மகளிர் அணியும் முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடந்த லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்தியா. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை அரை இறுதிப் போட்டியில் வீழ்த்தியதன் மூலம், இந்திய அணியின் நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இரண்டு அணிகளில் யார் வெற்றி பெற்றாலும், இன்று ஒரு புதிய சாம்பியன் அணி கோப்பையை உச்சி முகரும்.
இந்திய மகளிர் அணி, இன்று ஒருநாள் உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில், இந்திய ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு இப்போதே ஆயத்தமாகி விட்டனர். எதிர்பார்த்ததை விட அதிக ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என்பதால், ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் மந்தனா, ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரால் பலமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பலமாகவே உள்ளனர். சம பலம் வாய்ந்த இரு அணிகள் இன்று களத்தில் சந்திக்க உள்ளன. இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றப் போவது யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.