
வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், நோய்களும் அதிகளவில் பெருக்கெடுக்கின்றன. இதனால் நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க கட்டாயத்தில் மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ரஷ்ய நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டறிந்து சாதனை படைத்தனர். அவ்வகையில் தற்போது இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளும் சுவாச நோய்களுக்கான புதிய மருந்தைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் இந்த சாதனை மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது. நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாச பிரச்சனை என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களின் சுவாச பிரச்சனைக்கு தீர்வாக தற்போது ‘நபித்ரோமைசின் (Nafithromycin)’ என்ற ஆன்டிபயாடிக் மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “சுவாச நோய்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக போராடும் ‘நபித்ரோமைசின்’ என்ற ஆன்டிபயாடிக் மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், இந்தியா மருத்துவ உலகில் தன்னிறைவை அடைவதற்கான முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறது.
நபித்ரோமைசின் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு மற்றும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட முதல் மூலக்கூறாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு நோயாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த கண்டுபிடிப்பு ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன்’ இதழில் வெளிவந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நபித்ரோமைசின் ஆன்டிபயாடிக் மருந்து, வருங்காலத்தில் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருந்து எளிதாக கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நபித்ரோமைசின் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தானது, நுரையீரல் அழற்சி சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும். சுவாசக் கோளாறுகளுக்கு இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இதுதான். சாதாரண மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரிய நுரையீரல் அழற்சிக்கு எதிராக நபித்ரோமைசின் ஆன்ட்டிபயாட்டிக் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘லாக்டோன் கீட்டோலைடு’ ஆகும். மேக்ரோலைடு குழுவிலிருந்துப் பெறப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் குறிபபதே கீட்டோலைடுகள் என்பதாகும்.