இனி கிழிந்த நோட்டு பார்த்து நோ டென்ஷன்..! ரிசர்வ் வங்கி எடுக்க போகும் அதிரடி ஆக்ஷன்..!

indian rupees and RBI
indian rupees and RBI
Updated on

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் (RBI) நிர்வகிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்தியாவின் ரூபாய் நோட்டுக்கள் காகிதத்தால் ஆனவை என்பதால், பாக்கெட்டில் வைக்கும் போதோ, அடிக்கடி பர்சில் இருந்து எடுக்கும் போதோ கிழிந்து விடும். இன்னும் சிலர் பாக்கெட்டில் ரூபாய் நோட்டு வைத்தை மறந்து விட்டு துணி துவைக்க போட்டு விடுவார்கள். இது போன்ற சமயங்களில் நனைந்து மடிந்து போய்விடும்.

கடைகளிலோ, பஸ்சிலோ என எங்கு சென்று கிழந்த நோட்டை நீட்டினால் வேறு நோட்டை கேட்பார்கள். வங்கிகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதி இருந்தாலும் கூட இன்னும் பல இடங்களில் கிழிந்த நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பது தான் உண்மை. அப்படி கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது இன்னும் சிரமமான விஷயமாக தான் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் பணத்திற்கான தேவை தொடர்ந்து கடுமையாக அதிகரித்து வருவதன் மத்தியில், பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்த விவாதங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாட்னா மற்றும் மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கடந்த இரண்டு வாரியக் கூட்டங்களில், பாலிமர் அல்லது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படியுங்கள்:
2,000 ரூபாய் நோட்டுக்கு கடைசி சான்ஸ்.! RBI அவசர அறிவிப்பு.!
indian rupees and RBI

அதாவது, நீண்ட நாட்கள் பயன்படும் பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. தண்ணீர் மற்றும் சேதத்துக்கு அதிக எதிர்ப்பு கொண்ட இந்த பிளாஸ்டிக் நோட்டுகள், வெளிநாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. மேலும், போலி நோட்டு தடுப்பிலும் இவை பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த பாலிமர் ரூபாய் நோட்டுகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டாலும், ஆஸ்திரேலியாதான் அதை முதன்முதலில் இந்த நோட்டை அறிமுகப்படுத்தியது. அங்கு தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் நோட்டுகளே மிகவும் வலிமையானவையாகக் கருதப்படுகின்றன.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகளைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவுகளோடு ஒப்பிடுகையில் பாலிமர் நோட்டுகளை தயாரிக்க மிக மிகக் குறைந்த செலவே ஆகும் என்று கூறப்படுகிறது.

வழக்கமான காகித ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும்போது, பாலிமர் நோட்டுகளின் குறைந்த உற்பத்திச் செலவு மற்றும் நீண்ட ஆயுட்காலம் காரணமாக இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே 2025 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவினம் முந்தைய நிதியாண்டில் ரூ. 5,101.4 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 6,372.8 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12.3 சதவீதம் அதிகமாகும். ரூபாய் நோட்டு அச்சிடுவதற்கான தேவை அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பத்தில் பாலிமர் நோட்டுகள் விலை உயர்ந்தவையாகத் தெரிந்தாலும் அவற்றின் ஆயுட்காலம் காகித நோட்டுகளை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இது நீண்ட கால அடிப்படையில் அடிக்கடி புதிய நோட்டுகளை அச்சிட வேண்டிய தேவையைக் குறைத்து, கணிசமான சேமிப்பிற்கு வழிவகுக்கும் என்று ஆர்பிஐ கருதுகிறது. மேலும், ஏடிஎம்கள் மற்றும் பணத்தைக் கையாளும் அமைப்புகள் இப்போது மிகவும் நவீனமாக இருப்பதால் அவற்றால் பிளாஸ்டிக் நோட்டுகளை எளிதில் அடையாளம் கண்டு செயலாக்கம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும், அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்துவதில் அதிகரித்து வரும் சவாலையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. 2025 நிதியாண்டில் சுமார் 23.8 பில்லியன் அழுக்கு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இது முந்தைய ஆண்டில் திரும்பப் பெறப்பட்ட 21.24 பில்லியன் நோட்டுகளை விட 12.3 சதவீதம் அதிகமாகும். திரும்பப் பெறப்பட்ட நோட்டுகளில் பெரும்பாலானவை ரூ.500 நோட்டுகளாகவும், அதனைத் தொடர்ந்து ரூ.100 நோட்டுகளாகும்.

புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவும் தொடர்ந்து வேகமாக விரிவடைந்து வருகிறது.

மே 15 நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு 11.5 சதவீதம் உயர்ந்து, ரூ. 42.86 டிரில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முழுமையான மதிப்பின் அடிப்படையில் பார்க்கையில், 2027 நிதியாண்டின் முதல் ஒன்றரை மாதங்களில் புழக்கத்தில் உள்ள பணம் ரூ. 1.15 டிரில்லியன் அதிகரித்துள்ளது; இது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து வளர்ந்து வந்தபோதிலும், ரொக்கப் பணத்திற்கான தேவை நீடித்து வருவதையே பிரதிபலிக்கிறது.

அதேசமயம், ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்புள்ள பணத்தாள்களுக்கான தேவை சமீபத்திய ஆண்டுகளில் வலுவாகவே இருந்து வருகிறது. இருப்பினும், புழக்கத்தில் உள்ள மொத்தப் பணத்தின் மதிப்பில் இவற்றின் பங்கு குறைவாகவே நீடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மொத்தப் பண மதிப்பில் ரூ.10 பணத்தாள்களின் பங்கு வெறும் 0.7 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது; அதேவேளையில், ரூ.20 பணத்தாள்களின் பங்கு 0.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொண்ட முயற்சிகள், எதிர்பார்த்த விளைவை எட்டவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகள் அதிக நீடித்து உழைக்கக்கூடியவையாக இருப்பதோடு, விரைவில் சேதமடையாது என்பதால் நோட்டுகளை மாற்றுதல் மற்றும் மறு அச்சிடுதல் மீதான அழுத்தம் கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
RBI கொண்டு வந்துள்ள புதிய வசதி..! இனி மேல் பணம் அனுப்ப OTP தேவையில்லை...!
indian rupees and RBI

எனவே இனிவரும் காலங்களில் இந்த பாலிமர் நோட்டுகள் அச்சடிப்பு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com