மத்திய அரசு அறிவித்த புதிய விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க இண்டிகோ நிறுவனம் முனைப்பினக் காட்டாததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இண்டிகோ நிறுவனத்தின் 2,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டன.இதனால் இதில் பயணிக்க தயாராக இருந்த பயணிகள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் தான், நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவிகிதம் குறைத்து மத்திய அரசு உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் முழுவதுமாக சீரடைந்துவிட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் கூறிய போதிலும் இந்த முடிவினை அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் 2,200 விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்,இந்த புதிய உத்தரவு காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் 200க்கும் மேற்பட்ட சேவைகள் தினமும் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.
முந்தைய எச்சரிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நெருக்கடியை முழுமையாகத் தடுக்க இந்நிறுவனம் தவறிவிட்டது, இதனைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனத்தின் அறிக்கையில்,”ஒட்டுமொத்த இண்டிகோ சேவையின் வழித்தடங்களைக் குறைப்பது அவசியம் என்று அமைச்சகம் கருதுகிறது, இது விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை உறுதிப்படுத்த உதவும் மற்றும் ரத்து செய்வதைக் குறைக்க வழிவகுக்கும் என்னும் எதிர்பார்ப்பில். 10 சதவிகித குறைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், இண்டிகோ அதன் அனைத்து இடங்களுக்குமான சேவையை முன்பை போலவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும்,கட்டண வரம்புகள், பயணிகளின் வசதிகள் ஆகியவற்றில் சமரசம் கூடாது என்றும் அதைச் சார்ந்து வெளியாகியுள்ள மத்திய அரசின் அனைத்து உத்தரவுகளையும் விதிவிலக்கு இல்லாமல் பின்பற்றுமாறும் இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்தப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோவின் சேவைகளை 5 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டது, இந்த எண்ணிக்கையை இப்போது அமைச்சகம் இரட்டிப்பாக்கியுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதவர்களுக்கான பணம் முற்றிலுமாக திருப்பி வழங்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள நபர்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும்உடைமைகளை ஒப்படைப்பதை விரைவுபடுத்த கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
அமைச்சக அதிகாரிகளுடனான தனது சந்திப்பிற்கு முன்னதாக, எல்பர்ஸ் X இல் விமான நிறுவனம் "மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது" என்று கூறியிருந்தார், மேலும் இடையூறுகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
இது சார்ந்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் விமான நிறுவனம் சந்தித்த மிக மோசமான செயல்பாட்டு நெருக்கடிகளில் ஒன்றாகும் இது. விமானப் போக்குவரத்துத் துறையில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், அதிகரித்து வரும் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யவும் மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மத்திய அரசின் இந்த சமீபத்திய உத்தரவு உறுதி செய்கிறது.எனவே,விமானப் பயணிகளுக்கு இனி வரும் காலங்களில் இம்மாதிரியான சிக்கல்கள் ஏற்படாது என திடமாக நம்பலாம்.