கிரிக்கெட் வரலாற்றில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது என்பது அரிதான நிகழ்வு தான். ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை உள்ளிட்ட தொடர்களில் மட்டுமே இந்தியாவும், பாகிஸ்தானும் மோதி வருகின்றன. இந்நிலையில் தற்போது 17வது ஆசியக் கோப்பைத் தொடர் அபுதாபி மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து சூப்பர் 8 சுற்றில் தலா 3 போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகளைப் பிடிக்கும் 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும். சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இதன் முதல் ஆட்டத்தில் பி பிரிவில் தகுதிபெற்ற 2 அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் இருந்து தகுதிபெற்ற இந்தியாவும், பாகிஸ்தானும் வருகின்ற செப்டம்பர் 21 ஆம் தேதி மோதுகின்றன.
நடப்பு ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ள நிலையில், அடுத்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கி விட்டது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி போர் பதற்றமான சூழல் நிவுவுதன் காரணமாக பல ஆண்டுகளாக இரு அணிகளுக்கும் இடையே இருதரப்புத் தொடர்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அது ஏதேனும் ஒரு மிகப்பெரிய தொடரில் மட்டுமே நடக்கும் அரிதான நிகழ்வாகி விட்டது.
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்திய வீரர்கள் களம் காண்கின்றனர். அதற்கேற்ப வீரர்களின் செயல்பாடும் சிறப்பாக இருப்பதால், இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி திணறுகிறது.
உலகக்கோப்பைக்குத் தயாராகும் வகையில் ஆசியக் கோப்பைத் தொடர் டி20 மற்றும் ஒருநாள் போட்டி உள்ளிட்ட 2 வடிவங்களில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் போட்டி வடிவில் கடந்த முறை நடந்த ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வென்று இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. இந்நிலையில் நடப்பு ஆசியக் கோப்பையையும் இந்தியா தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இறுதிப்போட்டிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதி பெற்றால், ஒரே தொடரில் இரு அணிகளும் 3 முறை மோதும் வாய்ப்பு கிடைக்கும். இப்போதைக்கு சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா வெல்வதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.