
IPPB என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி(Indian Post payment Bank), இந்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தபால் துறையின் ஒரு பிரிவாகும். இன்றைய காலகட்டத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காப்பீட்டு திட்டங்கள் போன்றவை மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB), குறைந்தளவில் பிரீமியம் செலுத்தும் விபத்து காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது அதிக பிரீமியங்களை செலுத்த முடியாதவர்களுக்கு மலிவு விலையில் காப்பீடு வழங்குவதை நோக்கமாக கொண்ட விபத்து காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.520ல் இருந்து 799 வரை வருட பிரீமியத்திற்கு மத்திய அரசினுடைய ‘இந்தியன் போஸ்ட் பேமெண்ட் பேங்க்’ 10 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்குகிறது.
இந்த காப்பீட்டிற்கான பாலிசி ஒரு வருடமாகும். 18 வயதில் இருந்து 55 வயது உள்ள அனைவரும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடிமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
விபத்து காப்பீட்டுக் கொள்கை மற்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படுகிறது. இது எதிர்பாராத மரணம், விபத்தால் ஏற்படும் ஊனம் அல்லது நிரந்தர ஊனம் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளை உள்ளடக்கியது. இத்துடன் இது மருத்துவமனை செலவு மற்றும் வெளிநோயாளி செலவுகளையும்(OPD), விபத்துகள் தொடர்பான பிற சிகிச்சைகளையும் உள்ளடக்கியது.
எதிர்பாராமல் ஏற்படும் விபத்து அல்லது உடல் நலப்பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகும் போது முதலில் 60000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் OPD சிகிச்சை பெறும் போது 30,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
மருத்துவமனையில் தொடர்ந்து 10 நாட்கள் வரை தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தினமும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் வரை கல்விச் செலவுகளுக்கான காப்பீடும் தரப்படுகிறது. எதிர்பாராத மரணம், விபத்தால் ஏற்படும் ஊனம் அல்லது நிரந்தர ஊனம் போன்றவற்றிற்கு இந்த தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர்ந்து பலன் பெற நீங்கள் செய்ய வேண்டியது இது ஒன்று தான். அருகில் உள்ள ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி’க்கு சென்று பிரீமியம் கணக்கை தொடங்கினால் மட்டும் போதும். 10 நிமிடங்களில் நீங்கள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியம். இந்த காப்பீடு திட்டத்தை பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள அருகில் உள்ள இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக்கு சென்று அறிந்து கொள்ளலாம். இந்த திட்டம் அனைத்து கிளைகளிலும் கிடையாது. குறிப்பிட்ட கிளைகளில் மட்டுமே உண்டு என்பதால் அருகில் உள்ள இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக்கு சென்று உங்களுக்கு தேவையான விவரங்களை அங்குள்ள அதிகாரியிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.