இந்தியாவில் புதிய வருமானவரி சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அந்த சட்டத்தின் படி தான் இனிமேல் வருமான வரி விலக்குகள் இருக்கும் என்றும் ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்தியாவில் தற்போதுள்ள வருமானவரி சட்டம், கடந்த 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் வார்த்தைகளை எளிமைப்படுத்துவதற்காகவும் இந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைத்து விட்டது.
இந்நிலையில், புதிய வருமானவரி சட்டம்-2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், புதிதாக வரவுற்ற சட்டம் மிகவும் எளிமையாகவும், சாமானியர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேவையற்ற பிரிவுகள் மற்றும் பழமையான கலைச்சொற்கள் குறைக்கப்பட்டு, மொத்த சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-லிருந்து 536 ஆகவும், அத்தியாயங்கள் 47-லிருந்து 23 ஆகவும், மொத்த வார்த்தை எண்ணிக்கை 5.12 லட்சத்திலிருந்து 2.6 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
64 ஆண்டுகள் பழமையான 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள, புதிய வருமான வரிச் சட்டம் 2025, அடுத்த நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ், எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் (ஐ.டி.ஆர்) படிவங்கள் மற்றும் விதிகள் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எளிமையாக்கப்பட்ட ஐ.டி.ஆர் படிவங்கள் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் மூலம் வரி செலுத்துவோர் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைக் குறைத்து, அறிக்கையிடும் செயல்முறையைச் சீராக்க இந்த புதிய சட்டம் வழிவகுக்கும்.
புதிய சட்டப்படி, ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, அதாவது மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் சாமானிய மக்கள் இனிமேல் அரசுக்கு வருமான வரி கட்டத் தேவையில்லை.
புதிய வருமானவரி சட்டத்தின் ஒரு அங்கமாக, ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 4-க்கு பதிலாக 2 ஆக குறைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் 375 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது.
அதே சமயத்தில், மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் சிகரெட், பான்மசாலா, புகையிலை பொருட்களின் மீது ஜிஎஸ்டியுடன் கூடுதல் வரி விதிக்க புதிய சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள், மத்திய அரசு முடிவு செய்யும் தேதியில் அமலுக்கு வரும்.
அடுத்தகட்டமாக சுங்க வரிகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.