தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில், முதலமைச்சராக பதவியில் இருக்கும்போதே (Sitting Chief Ministers) தாங்கள் போட்டியிட்ட சொந்தத் தொகுதியில் தோல்வியைச் சந்தித்த முதலமைச்சர்கள் சிலர் உள்ளனர். அதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ளலாம் வாங்க..
தமிழகத் தேர்தல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சரே, தனது சொந்தத் தொகுதியில் மக்களால் நிராகரிக்கப்படுவது என்பது அந்த ஆட்சியின் மீதான அதிருப்தியை குறிப்பதாக அமைகிறது.
1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல் தொடங்கி இப்போது நடைபெற்ற (2026-ம் ஆண்டு) தேர்தல் வரை, நான்கு முறை இத்தகைய வரலாற்றுச் சுவடுகள் பதிவாகியுள்ளன.
பி.எஸ்.குமாரசாமி ராஜா (1952): மெட்ராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா, 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம், தமிழகத்தில் (அன்றைய சென்னை மாகாணம்) சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முதல் பதவியிலிருக்கும் முதலமைச்சர் என்ற நிலையை இவர் பெற்றார்.
எம்.பக்தவத்சலம் : 1967ல் நடைபெற்ற தமிழக தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் கடைசி முதலமைச்சரான எம்.பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி. ராஜரத்தினத்திடம் 8,926 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தத் தோல்வி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்கும், திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்கும் ஒரு தொடக்கமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கமுடிவில்லை.
ஜெயலலிதா: அதிமுக ஆட்சியில் இருந்தபோது, 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தின் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, திமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுகவனத்திடம் வெறும் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மு.க. ஸ்டாலின் : 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 80407 வாக்குகளையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 72,321 வாக்குகளையும் பெற்றிருந்தனர். கடந்த மூன்று தேர்தல்களாக இதே தொகுதியில் வெற்றி பெற்று வந்த ஸ்டாலின், முதன்முறையாக புதிதாக அரசியலில் நுழைந்த தவெக கட்சியிடம் தனது கோட்டையை இழந்துள்ளார். இதன் மூலம், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த மாநிலத்தின் நான்காவது பதவியிலிருக்கும் முதலமைச்சர் என்ற நிலையை அடைந்தார்.
அதுமட்டுமின்றி முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியில் இருக்கும்போதே தோல்வியடைந்த வரலாற்றுப் பட்டியலில் இணைந்துள்ளார்.
இத்தோல்விகள், தமிழகத்தில் நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தக்க தேர்தல் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன; அதிகார பலத்தையும் தாண்டி, மக்களின் தேவைகளும் உணர்வுகளுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பதற்கு இந்த நான்கு முதலமைச்சர்களின் தோல்வி வரலாறு ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.