

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட எபோலா பரவலை உலக சுகாதார அமைப்பு "சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை" (PHEIC) என அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியா விமான நிலையங்களில் எபோலா கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பு, பல நாடுகளை சர்வதேசப் பயணிகளின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், பொது சுகாதார ஆயத்த அமைப்புகளை வலுப்படுத்தவும் தூண்டியுள்ளது. காங்கோ நாட்டில் எபோலா பாதிக்கப்பட்டு இதுவரை 131 பேர் வரை பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து, இந்திய சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைச் சோதனைச் சாவடிகளில் தீவிர மருத்துவக் கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது பிற நாடுகள் வழியாகவோ டெல்லி வரும் பயணிகள் அனைவருக்கும் தீவிர தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தில் இந்த அவசர வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது.
விமான நிலைய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி காய்ச்சல், உடல் பலவீனம் மற்றும் கடுமையான சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் காரணமின்றி ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிற்கான அறிகுறிகள் இருக்கும் பயணிகள் குடியேற்ற பிரிவிற்கு செல்லும் முன்பே தங்களை பற்றிய முழு விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, காங்கோ குடியரசு (DR Congo), உகாண்டா (Uganda) மற்றும் தெற்கு சூடான் (South Sudan) ஆகிய அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடுகள் வழியாகவோ (Transit) இந்தியாவிற்கு வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று, எபோலா நோயாளிகளின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர்களும் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், டெல்லி வந்திறங்கிய பிறகு 21 நாட்களுக்குள் மேலிருந்த அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள சுகாதார சேவை மையத்தை அணுகி தங்களது பயணத்தை பற்றி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது எபோலா வைரஸின் பாதிப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் இந்த நடவடிக்கைகள் முற்றிலும் முன்னெச்சரிக்கை நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
கோவிட்-19 போல எபோலா காற்றில் பரவும் நோய் அல்ல என்பதால், முறையான விமான நிலையக் கண்காணிப்பு மூலமே இதனை எளிதாகத் தடுத்துவிட முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நோய்ப் பரவலைத் தடுக்க, ஆரம்பத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்துவது இன்றியமையாதது என்றும் கூறுகின்றனர்.
கடந்த வாரம், எபோலா வைரஸ் பரவலை சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலை (Public Health Emergency of International Concern) என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்த வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து மிக அதிவேகமாகப் பரவி வருவதாக அதன் மூத்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எபோலா (Ebola) என்பது மனிதர்களையும் பிற விலங்குகளையும் தாக்கும் ஒரு கடுமையான, ஆபத்தான தொற்று நோயாகும். இது ‘ஆர்த்தோஎபோலாவைரஸ்’ (Orthoebolavirus) குடும்பத்தைச் சேர்ந்த, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய (Zoonotic) ஒரு கடுமையான உயிர்க்கொல்லித் தொற்றாகும். பாதிக்கப்பட்ட மனிதர்களின் இரத்தம், உமிழ்நீர், வியர்வை, கண்ணீர், சிறுநீர், வாந்தி, மலம் மற்றும் தாய்ப்பால் போன்ற உடல் திரவங்கள் மற்றும் அவர்களது உடமைகளுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. மேலும், வைரஸ் பாதித்த மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும், தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தொடுவதன் மூலமும் இது பரவக்கூடும்.
பாதிக்கப்பட்ட நபர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். எபோலா தொற்றால் ஒருவர் உயிரிழந்துவிட்டால், அவர்களின் உடலிலும் வைரஸ் உயிருடன் இருக்கும். எனவே, உடலைத் தொட்டுப் பார்ப்பதைத் தவிர்த்து, உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் அடக்கம் செய்ய வேண்டும்.