மேற்கு ஆசியப் போர்: இந்திய உற்பத்தித் துறைக்கு கடும் நெருக்கடி - எகிறும் உர விலை, முடங்கும் ஜவுளித் தொழில்..!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம், இந்தியாவின் பொருளாதாரத்தில் வெறும் விவசாய ஏற்றுமதியை மட்டுமல்லாமல், பலதரப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
Strait of Hormuz
Strait of Hormuz
Published on

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையோன போர் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக, இந்திய உற்பத்தித் துறை முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த மோதல் வெறும் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன் நின்றுவிடாமல், வேதிப்பொருட்கள், எஃகு, அலுமினியம், விவசாயம், உணவு, ஜவுளி மற்றும் மதுபான உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த மோதல், வெறும் புவிசார் அரசியலைத் தாண்டி, ஒரு முழுமையான உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகத் தீவிரமடைந்து வருகிறது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. போர் பதற்றம் அதிகரித்த பிறகு, ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 100 டாலருக்கும் மேல் உயர்ந்தது. இதன் தாக்கம் எரிசக்தி சந்தைகளைத் தாண்டியும் செல்கிறது.

உயரும் எண்ணெய் விலைகள், உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும், விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கும், நீர்ப்பாசன அமைப்புகளைப் பராமரிப்பதற்கும் ஆகும் செலவை அதிகரிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கா - ரஷ்யா போட்டியில் இந்தியாவுக்கு லாபம் கிடைக்குமா.?
Strait of Hormuz

இந்தியாவின் பெரும்பாலான உரங்கள் வளைகுடாப் பகுதிகளில் இருந்து ஹோர்முஸ் வழியாக தான் வருகின்றன. மேற்கு ஆசியப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால், இறக்குமதி செய்யப்படும் சிறப்பு உரங்களின் விலைகள் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. குறிப்பாக விவசாயத் துறைக்குத் தேவையான சல்பர் விலை கடந்த ஆண்டை விட 80 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக காரிஃப் பயிர் சாகுபடி காலத்தில் டி.ஏ.பி போன்ற உரங்களின் விலை உயர்வது விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும். மேலும் உர தட்டுப்பாடு மற்றும் உயர் விலை, விளைச்சலை பாதித்து, உணவுப் பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது

இந்தியா தனது யூரியா மற்றும் பாஸ்பேட் உரத் தேவைகளுக்கு மேற்கு ஆசியாவைச் சார்ந்துள்ளதால், விநியோகச் சங்கிலி முறிவால் உரம் விலை உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் DAP உரப்பை விலை 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

மேலும் நைட்ரஜன் உர விலைகள் தற்போதைய அளவிலிருந்து இரட்டிப்பாகக்கூடும் என்றும், பாஸ்பேட் விலைகளும் கடுமையாக உயரும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மோனோ-அம்மோனியம் பாஸ்பேட் (MAP), மோனோ-பொட்டாசியம் பாஸ்பேட் (MKP), PON, SOP, கால்சியம் நைட்ரேட் மற்றும் பிற நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்கள் போன்ற இறக்குமதி செய்யப்படும் சிறப்பு உரங்களின் விலைகள் 20% வரை உயர்ந்துள்ளதால், உள்ளூர் உற்பத்தியாளர்களும் இந்த உரங்களின் உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

தனது உரங்களில் 40%க்கும் அதிகமானவற்றை மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா, அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரையின் முக்கிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது. பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக கப்பல்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்படுவதால், கப்பல் போக்குவரத்துச் செலவுகள் ஏற்கனவே 18% அதிகரித்துள்ளன.

இதற்கிடையே இந்த மோதல் ஜூன் மாதம் வரையிலும் நீடித்தால், கூடுதலாக 45 மில்லியன் மக்கள் கடும் பசி நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்றும்; இதன் மூலம், உலகளாவில் பசியால் வாடுபவர்களின் மொத்த எண்ணிக்கை, தற்போதுள்ள 319 மில்லியன் என்ற உச்சபட்ச அளவையும் கடந்துவிடும் என்றும் உலக உணவுத் திட்டம் (WFP) மேற்கொண்ட ஓர் ஆய்வு எச்சரிக்கிறது.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, முக்கிய உதவிப் பாதைகள் தடைபட்டுள்ளதாகவும், இதனால் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில பகுதிகளுக்கு உயிர் காக்கும் பொருட்கள் அனுப்பப்படுவது தாமதமாவதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) கூறுகிறது.

இந்தியாவின் உயர்தர பாஸ்மதி அரிசி ஏற்றுமதி துறை, இந்த மோதலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. சரக்குகள் துறைமுகங்களில் தேங்கி நிற்கின்றன. தற்போதைய சூழலால் சுமார் 2,00,000 டன் அரிசி மூட்டைகள் கப்பல்களிலேயே தேங்கி கிடக்கின்றன. இது நீண்ட காலம் நீடித்தால், உள்நாட்டில் அரிசி வரத்து அதிகரித்து, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விலை குறையலாம்.

அதேபோல் இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ள தகவலின்படி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 'ஃபிளாக்ஸ்' எனப்படும் முக்கிய மூலப்பொருள் வரத்து முடங்கியுள்ளது. இன்னும் 30 நாட்களுக்கு மட்டுமே தேவையான கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம் அடுத்த 10 நாட்களுக்குள் இந்தச் சிக்கல் தீராவிட்டால், ஜவுளி உற்பத்தியே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அலுமினியம் மற்றும் எஃகு துறைகளும் எரிவாயு தட்டுப்பாட்டினால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. அலுமினியம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 90 சதவீத குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல், துருப்பிடிக்காத எஃகு தயாரிப்பாளர்களும் எல்.பி.ஜி விலை உயர்வால் குழாய்கள் மற்றும் டியூப்கள் தயாரிப்பில் கூடுதல் செலவைச் சந்தித்து வருகின்றனர்.

போர் பதற்றம் காரணமாக கண்ணாடி பாட்டில்களின் விலை 20 சதவீதமும், பேப்பர் கார்டன்களின் விலை 100 சதவீதமும் உயர்ந்துள்ளன. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கண்ணாடி தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் இருப்பதால், வரும் மாதங்களில் பீர் மற்றும் இதர பானங்களின் விநியோகம் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெயிண்ட், டயர் மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் என பலவும் கச்சா எண்ணெயை மூலப்பொருளாக கொண்டுள்ளன. ஆக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, அவர்களின் உற்பத்தி செலவை அதிகரித்து லாபத்தை பாதிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஹார்முஸ் ஜலசந்தி: உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடி முடங்குகிறதா?
Strait of Hormuz

ஒட்டுமொத்தமாக, சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com