
இந்தியா சமீப காலமாக அதிவேகமாக தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த சண்டையில் இந்தியாவின் ஆயுதங்கள், நாட்டின் பாதுகாப்பில் பெரிதும் உதவின. வெளிநாட்டு ஏவுகணைகளை, டிரோன்களை நடுவானிலே மறித்து அழித்த, இந்தியாவின் வலிமை உலக நாடுகளின் புருவங்களை உயர்த்தியது. ரஷ்யாவின் தயாரிப்பு ஆயுதங்கள் மட்டுமல்லாது , இந்தியாவின் பினகா MK ராக்கெட் அமைப்பும் இந்தச் சண்டையில் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது இந்தியா பினாகா MK III ஐ சோதிக்க உள்ளது. இதன் திறன் சீனாவையும் பாகிஸ்தானையும் பதட்டப்பட வைக்கிறது. புனேவில் உள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO), ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (ARDE) மற்ற ஆராய்ச்சி ஆய்வகங்களுடன் இணைந்து பினாகா MK III -ஐ உருவாக்கியுள்ளன.
பினாகா MK III என்பது பல குழல் ராக்கெட் ஏவுதள அமைப்பாகும். இது பினாகா குடும்பத்தில் மிகவும் மேம்பட்ட பதிப்பாகும். பல குழல் அமைப்பாக இருப்பதால் பல ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் ஏவ முடியும்.
இதற்கு முன் பினாகா MK I பல குழல் ராக்கெட் லாஞ்சர் 40 கிமீ வரம்பு வரை தாக்குதல் நடத்தும் திறனை கொண்டிருந்தது. பினாகா MK II பல குழல் ராக்கெட் லாஞ்சர் 60-90 கிமீ வரம்பு வரை தாக்குதல் நடத்தும் திறனை பெற்றிருந்தது. தற்போது பினாகா MK III பலகுழல் ராக்கெட் லாஞ்சர் 120 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இது 250 கிலோ எடையுள்ள போர்முனையை சுமந்து சென்று எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை அழிக்க வல்லது.
இதில் உள்ள ராக்கெட் 300 மிமீ விட்டம் கொண்டது, முந்தைய பதிப்பை விட பெரியது. இது அதிக எரிபொருள் மற்றும் மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளை பெற்றுள்ளதால் துல்லியமாக தாக்கும் திறனைப் பெற்றுள்ளது. இந்த அமைப்பு DRDOவின் RCI உருவாக்கிய உயர் தொழில்நுட்ப வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாடு (GNC) கருவியைப் பயன்படுத்துகிறது.
இதில் லேசர்-கைரோ வழிசெலுத்தல் மற்றும் மைக்ரோஸ்ட்ரிப் ஆண்டெனாக்கள் உள்ளன. இதன் துல்லிய தாக்குதல் திறன் 10 மீட்டருக்கும் குறைவாக உள்ளது. இதனால் இலக்குகளை குறி வைத்து தெளிவாக தாக்க முடியும்.
பினாகா MK III ஐ ஏற்கனவே உள்ள பினாகா ஏவுகணை அமைப்பிலிருந்து ஏவலாம், இதனால் கூடுதல் செலவுகளைக் குறைக்க முடியும். ஒவ்வொரு ஏவுகணையும் 8 வழிகாட்டப்பட்ட ராக்கெட்டுகளை சுமந்து சென்று 700 - 500 மீட்டர் பரப்பளவை 44 வினாடிகளில் அழிக்கும் திறன் கொண்டது. பினாகா ராக்கெட் லாஞ்சர் 44 வினாடிகளில் 72 ராக்கெட்டுகளை ஏவுகிறது. பினாகா ராக்கெட்டுகளில் ஜிபிஎஸ் வசதியுடன் ஏற்கனவே ஒரு வழிகாட்டப்பட்ட அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. பினாகா ராக்கெட்டுகள் 4.7 மாக் (மணிக்கு 5,800 கிமீ) வேகத்தில் சென்று தாக்குதல் நடத்தும். இதை இடைமறிப்பது கடினம்.
பினாகா என்ற பெயரை நாம் அடிக்கடி முன்பே கேள்விப்பட்டு இருப்போம். பினாகா என்பது சிவபெருமான் பயன்படுத்திய மிகவும் சக்தி வாய்ந்த வில்லின் பெயராகும். அதைப் போன்றே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை பினாகா என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த அமைப்பு இந்திய இராணுவத்திற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும், குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளால் பயன்படுத்தப்படும் நீண்ட தூர ஆயுதங்களுக்கு எதிராக இதன் செயல்பாடுகள் இருக்கும்.