

20 அணிகள் களமாடியுள்ள 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த பிப்ரவரி 7-ம்தேதி தொடங்கி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடியில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலுடன் உற்றுநோக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 27-வது லீக் போட்டி இன்று (ஞாயிற்றுகிழமை) கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது.
இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்வதை பார்க்க உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஸ்டேடியத்தில் குவிந்திருந்தனர்.
பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக உறவு இல்லாததால் கடந்த 13 ஆண்டுகளாக இரு நாடுகளும் நேரடி போட்டி தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி. மற்றும் ஆசிய போட்டிகளில் மட்டுமே இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன என்பதால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்கள் இடையே வழக்கம் போல் எகிறி இருக்கிறது.
அத்துடன் இந்திய மண்ணில் விளையாட மறுத்த வங்காளதேசம் நடப்பு உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிராக லீக் ஆட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும நீண்டஇழுபறிக்கு பிறகு தங்கள் முடிவை திரும்ப பெற்று இந்த ஆட்டத்தில் களம் இறங்க சம்மதம் தெரிவித்தன. அந்த வகையிலும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் நெருக்கடியை தவிர்க்க முடியாதது என்றாலும், ஹாட்ரிக் வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் தங்களது முழுபலத்தையும் வெளிப்படுத்தியதால் இன்றைய ஆட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும்போது இரு அணிகளின் கேப்டன் கைகுலுக்குவது வழக்கம். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் இரு அணிவீரர்களும் கைகுலுக்க மறுத்தது சர்ச்சையானது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கவில்லை.
கடைசியாக நடைபெற்ற 5 சர்வதேச டி20 போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவே வென்றுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிராக இந்தப் போட்டியை வென்று பதிலடி தர வேண்டும் என்ற உத்வேகத்தில் பாகிஸ்தான் வீரர்கள் களம் இறங்கினர்.
இந்த பரபரப்பு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையோன இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் அபிஷேக் சர்மாவும், இஷான் கிஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே சல்மான் அலி ஆகா பந்து வீச்சில் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.
முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வெறும் 27 பந்துகளில் தனது அரைசதம் கடந்து, முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையையும் முறியடித்தார்.
அடுத்து திலக்வர்மாவுடன் ஜோடி சேர்ந்து இஷான் கிஷன் அதிரடி விளையாடிய நிலையில் 77 ரன்களில்(40 பந்துகளில்) ஆட்டமிழந்து வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய நிலையில் திலக் வர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற 4-வது விக்கெட்டுக்கு களத்தில் இறங்கிய பாண்ட்யாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தானின் அதிரடியான பந்து வீச்சால் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய நிலையில் 19-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் (32 ரன்கள் )ஆட்டமிழந்தார். அடுத்து ரிங்கு சிங் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது.
அதனை தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகிப்சதா ஃபர்ஹான், சயீம் ஆயுப் இருவரும் களத்தில் இறங்கி ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பே முதல் ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா முதல் விக்கெட்டை (ஃபர்ஹான்)வீழ்த்தி, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அடுத்து சல்மான் ஆகா களத்தில் இறங்கிய நிலையில் சயீம் ஆயுப் 6 ரன்களில் LBW முறையில் ஆட்டமிழந்து வெளியேற பாகிஸ்தான் 1.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது.
அதனை தொடர்ந்து பாபர் அசாம் களம் இறங்கிய நிலையில் சல்மான் ஆகா ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேற 4.5 ஓவர்களில் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான் அணி.
அதனை தொடர்ந்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொர்ப்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற, கடைசியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.