
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி, நாடு முழுவதும் உள்ள 1500 பணியிடங்களுக்கான உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வங்கித் துறையில் பயிற்சி பெற்று பணிபுரிய இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு இந்தியன் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 7-ம்தேதிக்கு முன்னர் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான indianbank.inல் பதிவு செய்ய வேண்டும்.
இந்தியன் வங்கி பயிற்சிப் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
* ஜூலை 1, 2025 நிலவரப்படி 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரைவும், பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) 3 ஆண்டுகள் வரைவும், தரநிலை மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 ஆண்டுகள் வரையும் அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவு மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
* விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
* இந்தியா, நேபாளம், பூட்டான் அல்லது திபெத்திய அகதி ஆகிய நாடுகளின் குடிமகனாக இருப்பவர்கள் இந்தியன் வங்கியில் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
* அப்ரண்டிஸ் பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி ?
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் முதலில் தங்களது தகுதி பற்றிய விபரங்களை ibpsonline.ibps.in/ibajun25 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் www.indianbank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
SC, ST மற்றும் PwBd பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175 + GST கட்டணம் வசூலிக்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ரூ.800 + GST விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ibpsonline.ibps.in/ibajun25 என்ற இணையதளத்தில் மூலம் பதிவு செய்து, ஆகஸ்ட் 7-ம்தேதிக்குள் தேர்வு கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம், இடது கட்டைவிரல் ரேகை, கையொப்பம் மற்றும் கையால் எழுதப்பட்ட அறிவிப்பு ஸ்கேன் (hand-written declaration scan)ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 7, 2025.
தேர்வு முறைகள் :
தேர்வு முறை ஆன்லைன் தேர்வு மற்றும் மாநில மொழித் தேர்வு மூலம் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை, விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. எழுத்துத்தேர்வு தொடர்பான இதர விபரங்கள் மின்னஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
இந்தியன் வங்கியில் பயிற்சி பதவிக்கான தேர்வு செயல்முறை பல படிகளை உள்ளடக்கியதாகும்.
1. பல தேர்வு கேள்விகள் (MCQகள்) அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு
இந்தத் தேர்வில் ஐந்து பாடங்களில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் பகுத்தறிவுத் திறன் சம்பந்தமாக 15 கேள்விகளும், கணினி மொழி பாடங்களில் 10 கேள்விகளும், ஆங்கில மொழி பாடங்களில் 25 கேள்விகளும், அளவுத் திறன் சார்ந்த 25 கேள்விகளும், வங்கித் துறைக்கு சிறப்புக் குறிப்புடன் கூடிய பொது விழிப்புணர்வு சம்பந்தமாக 25 கேள்விகளும் கேட்கப்படும்.
2. உள்ளூர் மொழித் திறன் தேர்வு (LLPT)
இந்தியன் வங்கிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர் அவரின் தாய் மொழியை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பத்தாரர் என்றால் தமிழ் மொழியை நன்றாக அறிந்திருக்க வேண்டும். தாய் மொழியில் விண்ணப்பத்தாரர் வாசிப்பு, எழுதுதல், பேசுதல் மற்றும் புரிந்துகொள்வது ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தேர்வில் மதிப்பிடப்படும்.
இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெறுபவர்கள் இந்தியன் வங்கியில் பயிற்சிப் பணிக்கு தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பட்டதாரிகள், இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான indianbank.in ஐப் பார்வையிட்டு மேலும் விவரங்களை அறிந்துகொண்டு உடனே விண்ணப்பிக்கவும்.