இந்திய தபால் துறை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அனைத்து வகையான சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நடைமுறை நேற்று (அக்டோபர் 15-ம்தேதி) முதல் அதாவது இரண்டு மாத இடைஞ்சலுக்குப் பிறகு, மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், EMS (எக்ஸ்பிரஸ் மெயில் சர்வீஸ்), ஏர் பார்சல்கள், பதிவு செய்யப்பட்ட கடிதங்கள்/பாக்கெட்டுகள் மற்றும் டிராக் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் என அனைத்தையும் அனுப்பலாம்.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.
புதிய வரி விகிதம் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்கும் செலுத்துவதற்கும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அறிமுகப்படுத்திய புதிய ஒழுங்குமுறைத் தேவைகளுக்காக, அமெரிக்க நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு பின்னர், அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் தபால், ஆவணங்கள் தவிர்த்த இதர சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மற்றும் பார்சல் சேவைகளை நிறுத்தி இருந்தன. செக் குடியாசு, ஆஸ்திரியா, பெல்ஜியம் போன்ற நாடுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, புதிய கட்டண விதியின் கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் ஏற்றுமதிகளுக்கான அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகையில் அனுப்ப முடியும்.
அதன்படி 'டெலிவரி டியூட்டி பெய்ட்'(DDP) முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பின் கீழ், அனுப்புநர்கள் இந்தியாவிலேயே சுங்க வரிகளை முன்கூட்டியே செலுத்த முடியும். இதன் மூலம் அமெரிக்காவில் பார்சல்கள் விரைவாக அனுமதி பெற்று விநியோகிக்கப்படும். சுங்க வரிகள் 50 சதவீதம் வரை இருக்கலாம், ஆனால் தபால் கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும்.
கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை. இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது.
இதனால் இந்த அஞ்சல் சேவையில் சிறுகுறு தொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்கள் மிகவும் மலிவு விலையில் ஏற்றுமதி செய்து தொழில் வளர்ச்சியை பெருக்கிக்கொள்ளலாம். அதேசமயம், ஏற்றுமதியாளர்கள் திருத்தப்பட்ட அமெரிக்க இறக்குமதி தேவைகளுக்கு இணங்கும்போது மலிவு விலையில் சர்வதேச விநியோக விகிதங்களிலிருந்து தொடர்ந்து பயனடைவதை உறுதி செய்யும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் மாறாமல் இருக்கும்.
வாடிக்கையாளர்கள் இனி அனைத்து வகையான சர்வதேச அஞ்சல்களையும் தபால் நிலையங்கள், சர்வதேச வணிக மையங்கள் அல்லது அஞ்சல் அலுவலக ஏற்றுமதி மையம் (DNK) அல்லது www.indiapost.gov.in தளம் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்ப முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தபால் துறை, 1.5 லட்சம் அஞ்சல் அலுவலகங்களுடன் உலகின் மிகப்பெரிய தபால் நெட்வொர்க்காகும். அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கி இருப்பது, இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் என பொருளாதார வல்லூநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.