.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தொலைதூரப் பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். விரைவு ரயில்களில் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கி விடும். பயணிகளுக்கு ஏற்றவாறு முன்பதிவு விதிமுறைகளில் அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வருகிறது இந்தியன் ரயில்வே.
இந்நிலையில் தற்போது முன்பதிவு பட்டியலை வெளியிடும் கால நேரத்திலும் தற்போது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ரயில்வே துறை. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பாகவே, முன்பதிவு பட்டியல் மற்றும் பயண டிக்கெட் நிலை குறித்த விவரங்கள் வெளியாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றத்தால் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு ஒரு வேலை டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அவர்கள் மாற்று வழியை ஏற்பாடு செய்வதற்கான கால அவகாசம் அதிகமாக இருக்கும்.
பொதுவாக ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவு பட்டியல் மற்றும் டிக்கெட் நிலை வெளியிடப்படும். இந்நிலையில் இந்த முன்பதிவு பட்டியலை வெளியிடும் கால நேரம் 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு பட்டியல், முந்தைய நாள் இரவு 8 மணிக்கே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதியம் 2:01 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரையிலான ரயில்களக்கு, ரயில் புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரம் முன்பாக முன்பதிவு பட்டியல் வெளியாகும். மேலும் நளளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 4:59 மணி வரையிலான ரயில்களுக்கும் முன்பதிவு பட்டியல் 10 மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியாகும்.
முன்பதிவு பட்டியல் விரைவாகவே வெளியாவதன் மூலம் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கான டிக்கெட் நிலை முன்கூட்டியே தெரிந்து விடும். ஒருவேளை காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் பயணத்தை மேற்கொள்வதற்கான மாற்று வழியை ஏற்பாடு செய்ய இந்த கால அவகாசம் உதவியாக இருக்கும்.
PNR எணணைப் பயன்படுத்தி, பயணிகள் தங்கள் டிக்கெட் மற்றும் முன்பதிவு நிலையை தெரிந்து கொள்ளலாம்.
IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.irctc.co.in) அல்லது அங்கீகரிக்கப்பட்ட மொபைல் செயலிகளில், தங்களது 10 இலக்க பி.என்.ஆர். எண்ணை உள்ளிட்டு ‘Check PNR Status’ என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
எந்த ஒரு மொபைல் போனில் இருந்தும் 139 என்ற எண்ணை அழைத்தும் டிக்கெட் நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் 5676747 அல்லது 139 என்ற எண்ணிற்கு உங்கள் பி.என்.ஆர். நம்பரை எஸ்எம்எஸ் அனுப்பியும் முன்பதிவு டிக்கெட் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
இந்த புதிய வசதியின் மூலம், கடைசி நேரத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதைத் தடுக்க முடியும்.