

இந்திய ரெயில்வேயில் (Indian Railways) காலியாக உள்ள பணியிடங்களுக்கு Railway Recruitment Board Chennai மற்றும் Railway Recruitment Cell போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
ஸ்டேஷன் மாஸ்டர், டெக்னீஷியன், ஜூனியர் கிளர்க், அசிஸ்டென்ட் லோகோ பைலட், டிக்கெட் பரிசோதகர் (TC), மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் அசிஸ்டென்ட் போன்ற பல்வேறு பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பர்களை கணினி வழித் தேர்வு (CBT), உடற்தகுதித் தேர்வு (PET), மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
குறைந்தபட்சம் இத்தகைய பணிகளுக்கு ஏற்ப மாதம் ரூ.18,000 முதல் ரூ.35,400 வரையிலான அடிப்படை ஊதியத்துடன், ரெயில் பாஸ், மருத்துவ வசதி மற்றும் அரசுப் படிகள் போன்ற பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
பொதுவாக ரெயில்வே வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பரவி வருவதாகவும் அதை நம்பி ஏமாற வேண்டும் என்றும் இந்தியன் ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாக இந்திய ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல போலி கும்பல்கள் ஏமாற்றி வருவதாக பல்வேறு புகார்கள் வந்ததுள்ளது. இவ்வாறு மோசடியில் ஈடுபடும் கும்பல் முறையான தேர்வு (Exam) மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாமல், நேரடியாகப் பணி நியமன ஆணை (Appointment Letter) வழங்குவதாகக் கூறி பணம் வசூலில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய மோசடியில் ஈடுபடும் கும்பல், உண்மையான ரெயில்வே இணையதளம் போலவே டிசைன் செய்யப்பட்ட போலி இணையதளங்களை உருவாக்குவார்கள்.
அதன் மூலம் ரெயில்வே வாரியம் (RRB) அல்லது ரெயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC) பெயரில் போலியான பணி நியமன கடிதங்கள் மற்றும் அழைப்பு கடிதங்களை அச்சிட்டு அனுப்பி, டிக்கெட் கலெக்டர் (TC), கிளார்க் (Clerk), இன்ஜினியர் போன்ற பதவிகளைத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பறிப்பார்கள்.
அதுபோன்ற போலியான அறிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள ரெயில்வே வாரியம், ரெயில்வே வேலைவாய்புகள் தகுதி மற்றும் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதாக கூறியுள்ளது. அதேபோல் ரெயில்வே வேலைவாய்ப்புகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. அதாவது இந்திய ரெயில்வேயில் எந்தவொரு பதவிக்கும் பரிந்துரை (Recommendation) அல்லது லஞ்சம் மூலம் வேலை வழங்கப்படுவதில்லை. ரெயில்வே வேலைக்கு பணம் கேட்டால் அது மோசடியாக இருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
எனவே பொதுமக்கள் இதுபோன்ற போலி அறிவிப்புகளை நம்பி எந்தவொரு தனியார் நபர்களிடமோ, ஏஜெண்டுகளிடமோ பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எந்தவொரு வேலைவாய்ப்பு அறிவிப்புக்கும், ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ரெயில்வே வேலைக்கு RRB-யின் அதிகாரப்பூர்வ இணைதளமான rrbcdg.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து 1930 உதவி எண்ணில் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.