

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கியமாக ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. ரெயில்களில் கல்வி, வேலை, சொந்த வேலை காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காவும், அவர்களின் செலவை குறைப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நீண்ட தூர பயணத்தின்போது அலுப்பு, சோர்வு, உடல்வலி இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு ரெயில்கள் தான் சரியான தேர்வு. அதே போல முதியவர்களை அழைத்துபோவதற்கும் குழந்தைகளை விளையாட்டு காட்டி அழைத்துபோவதற்கும் ரெயில்கள் கொடுக்கும் செளகர்யத்தை வேறு எதுவும் தராது. இந்திய ரெயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது.
இதில் தோராயமாக நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரெயில்கள், வந்தே பாரத் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் என இதில் ஏராளம். குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு களைப்பின்றி, வசதியாக செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர்.
அந்த வகையில் ரெயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வதே பெரும் சவாலாக உள்ள இன்றைய சூழலில், முன்பதிவு செய்த பயணிகள் கடைசி நேரத்தில் தங்களின் பயணத் திட்டத்தை மாற்ற வேண்டியிருந்தால், அந்த டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரெயில்வே வழங்குகிறது. அதாவது, ரிஷர்வேஷன் டிக்கெட் எடுக்கும் போது கொடுத்த பயணிகளின் பெயரை மாற்ற முடியும். இதன் மூலம் வேறு நபர்கள் அந்த டிக்கெட்டில் பயணிக்க முடியும். ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் இருந்தாலும், இப்படி ஒரு வசதி உள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. இன்னும் சிலருக்கு இந்த வசதியை எப்படி பெறுவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அதாவது நீங்கள் முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவதாக இருந்தால், ரெயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே, அருகிலுள்ள ரெயில்வே முன்பதிவு அலுவலகத்தை (Reservation Counter) அணுகி இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
விண்ணப்பத்துடன் மின்னணு முன்பதிவு சீட்டின் (E-ticket) பிரிண்ட் அவுட் மற்றும் யாருடைய பெயருக்கு மாற்ற வேண்டுமோ அவரின் அடையாள அட்டை நகலையும் இணைக்க வேண்டும்.
உங்கள் டிக்கெட்டை மற்றவர்களுக்கு மாற்ற சில குறிப்பிட்ட நிபந்தனைகளும் உள்ளது. அதாவது,
* சலுகை விலையில் பெறப்பட்ட டிக்கெட்டுகளுக்கு (Concession Tickets) பெயர் மாற்றம் செய்யும் வசதி கிடையாது.
* உங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை உங்க தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி ஆகியோருக்கு மட்டுமே மாற்ற முடியுமே தவிர, முன்பின் தெரியாதவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நண்பர்களுக்கு டிக்கெட்டை மாற்ற முடியாது.
* அதேபோல் பணி நிமித்தமாக பயணம் செய்யும் அரசு ஊழியர்கள், தகுதியான அதிகாரியின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின்படி 24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றலாம்.
* அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன மாணவர்கள் குழுவாக பயணிக்கும்போது, அந்நிறுவனத் தலைவர் 48 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பித்து ஒரு மாணவரின் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்ற முடியும்.
* திருமணத்திற்காக குழுவாகச் செல்லும் அதில் ஒருவருடை டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்ற 48 மணி நேரத்திற்கு முன்பு விண்ணப்பித்து, ஒரு உறுப்பினரின் முன்பதிவை மற்றொருவருக்கு மாற்றலாம்.
* தேசிய மாணவர் படை (NCC) குழுக்களுக்கு, குழுத் தலைவர் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன் பெயர் மாற்றத்தைக் கோரலாம்.
* இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இத்தகைய பெயர் மாற்றக் கோரிக்கைகள் ஒருமுறை மட்டுமே ஏற்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
* அதேபோல் குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போது (Group Bookings), மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பெயர் மாற்றங்கள் அனுமதிக்கப்படாது.
- பண்டிகை காலங்களில் அதாவது, தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்களுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே டிக்கெட் எடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் விடுமுறை கிடைக்காத அல்லது அவசர வேலையால் பயணம் மேற்கொள்ள முடியாமல் போகும் போது அந்த பயணிகள், தங்கள் டிக்கெட்டில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் பயணிக்க இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும்.