.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரெயில்களில் கல்வி, வேலை நிமித்தமாக, சொந்த வேலை காரணமாக செல்லும் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரெயில்கள் சேவை உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரெயில்கள் சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நடைமேடையில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 204 ரெயில் சேவைகள் 115 ரெயில் சேவைகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சீரமைப்பு பணிகளுக்காக பிப்ரவரி 20-ம்தேதி முதல் 45 நாட்களுக்கு 10 மற்றும் 11 ஆம் எண் நடைமேடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக சில புறநகர் ரெயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டதால், குறிப்பாக காலை மற்றும் மாலை உச்சநேரங்களில் பயணிகள் அதிக நெரிசல், தாமதம் மற்றும் பயண சிரமங்களை சந்தித்து வருவதுடன் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதை அடுத்து பயணிகளின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு மின்சார ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் மின்சார ரெயில் சேவை சிக்கல் காரணமாக மாநகர பேருந்துகளை பீக் ஹவர்ஸ் நேரங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் இன்னல்களைப் போக்க, மாநகரப் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, நாளை (28.02.2026) முதல் தாம்பரம் மற்றும் பாரிமுனை இடையே கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளன.
இந்த பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமைச் செயலகம் மற்றும் பாரீஸ் கார்னர் வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.
காலை 6.40 மணி முதல் 9.40 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை 7 நிமிட இடைவெளியில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல் மாலை 5 மணி முதல் 8 மணி வரை கடற்கரை முதல் தாம்பரம் நோக்கியும் 7 நிமிட இடைவெளியில் 20 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாலையில் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்கு வசதியாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.
இதனிடையே, கூடுதலாக இயக்கப்பட்டுள்ள சிறப்பு பஸ்களில் ரெயில்வே மாதாந்திர பாஸ் வைத்திருப்போர், ரெயில் டிக்கெட் வைத்திருந்தாலும் இந்த பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.டி.சி-யின் இந்த அறிவிப்பு பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்தகைய பேருந்துகளின் கண்ணாடிகளில் SOUTHERN RAILWAY CHARTERED BUS என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம் மற்றும் கடற்கரை இடையேயான வேகப்பாதையில் காலை மற்றும் மாலை உச்ச நேரங்களில் தலா ஐந்து கூடுதல் 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. குறைந்த நிறுத்தங்களுடன் இயக்கப்படும் இந்த ரெயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி, எழும்பூர் மற்றும் கடற்கரை நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இதனால் பயண நேரம் சுமார் 75 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்களாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.