சிறுநீரகக் கற்கள் என்பது அக்காலத்தில் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்னையாக இருந்தது. குறைந்த நீர், உணவுமுறை, மருத்துவ நிலைகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படும் இந்த பாதிப்பு தற்போது நடுத்தர மற்றும் இளம் வயதினரையும் விட்டு வைப்பதில்லை.
சிறுநீரகக் கற்கள் என்பது சிறுநீரகத்தின் உள்ளே உருவாகும் உப்புகள் மற்றும் தாதுக்களின் ஒருங்கிணைந்த நிலை எனலாம். சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் வலியுடன் பிரச்னை தருகிறது. இதற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீர் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
சிறுநீரகக் கற்களின் பொதுவான வகைகளாக கால்சியம் ஆக்சலேட் கற்கள், கால்சியம் பாஸ்பேட் கல், ஸ்ட்ரூவைட் கற்கள், யூரிக் அமில கற்கள், சிஸ்டைன் கற்கள் என மருத்துவம் இதை வகைப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக, மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உடற்பயிற்சி செய்வது, உடல் பருமன், எடை குறைப்பு அறுவை சிகிச்சை அல்லது அதிக உப்பு அல்லது சர்க்கரை கொண்ட உணவை உண்பது ஆகியவை கூறப்படுகின்றன. மேலும் சிலருக்கு நோய்த்தொற்றுகள் மற்றும் குடும்ப பாரம்பரியம் ஆகியவையும் காரணமாகலாம்.
சிறுநீரகக் கற்கள் இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது. இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுகளை எடுப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். சில உணவுகளைத் தவிர்ப்பதும் இதில் முக்கியம்.
உப்பில் உள்ள மூலப்பொருளான சோடியம் சிறுநீரில் கால்சியத்தின் அளவை உயர்த்துகிறது. இதனால் கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது. மேலும், கால்சியம் பாஸ்பேட் கற்கள் துரித உணவுகள், இறைச்சிகள் மற்றும் சோடியம் அதிகமுள்ள மசாலாப் பொருட்களை எடுத்துக்கொள்வதால் ஏற்படுகிறது. அதிக ஆக்சலேட் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். சர்க்கரை அல்லது அதிக பிரக்டோஸ், கார்ன் சிரப் கொண்ட உணவுகள் மற்றும் பானங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும், காஃபினை தவிர்க்கவும். ஏனெனில், அது உடலில் இருந்து திரவங்களை வெளியேற்றுகிறது. இதனால் நீரிழப்பு ஏற்படுகிறது.
சிறுநீரகக் கற்கள் பாதிப்பின்போது போதுமான பானங்கள், குறிப்பாக அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். இளநீர், எலுமிச்சை நீர் மற்றும் பழச்சாறுகள் (சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல்) போன்ற திரவங்கள் அருந்த வேண்டும்.
24 மணி நேரத்தில் குறைந்தது இரண்டு லிட்டர் சிறுநீர் கழிக்கப் போதுமான திரவத்தை குடிக்க வேண்டும். வலி மற்றும் கலங்கலான சிறுநீர் உங்கள் உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்பதன் அறிகுறி. ஆகவே, எச்சரிக்கையுடன் இருந்து உணவு முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாண்டு சிறுநீரகக் கற்களைத் தவிர்ப்போம்.