நாட்டில் போக்குவரத்து துறை முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் நிலையில், தற்போது புதிதாக புல்லட் ரயில் போக்குவரத்தையும் மத்திய அரசு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி வருகின்ற 2027 ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷணவ் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் புல்லட் ரயில் சேவை பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், தற்போது இந்தியாவிலும் புல்லட் ரயிலுக்கான நேரம் வந்துவிட்டது. இந்தியாவில் புல்லட் ரயில் கட்டமைப்பு பணிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மேற்கு இந்தியாவில் உள்ள வர்த்தகப் பகுதிகளில் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், புல்லட் ரயில் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி வருகின்ற 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, மும்பை முதல் அகமதாபாத் வரை நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த சேவை 508 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான மத்திய அரசின் அதிவேக பயணத் திட்டமாகும்.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறையில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ரயில்களின் வேகத்தைக் கூட்டுதல் மற்றும் டிக்கெட் முன்பதிவில் சலுகை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது.
இது தவிர வந்தே பாரத் ரயில்களின் வருகைக்குப் பிறகு, பயணிகள் மத்தியில் அதிவேகப் பயணத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. மேலும் விரைவில் ஸ்லீப்பர் பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலும் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் புல்லட் ரயில் சேவைக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புல்லட் ரயிலின் வருகை குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “2027 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் நாட்டிற்கு முதல் புல்லட் ரயிலை பரிசளிக்க காத்திருக்கிறது ரயில்வே துறை. சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் புல்லட் ரயிலுக்கான டிக்கெட்டை வாங்கி அதிவேக பயணத்தை அனுபவிக்கலாம்.
மும்பை முதல் அகமதாபாத் வரையிலான இந்த புல்லட் ரயில் சேவையை படிப்படியாக அமலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி முதலில் சூரத் முதல் பிலிமோரா வரையில் புல்லட் ரயில் பாதை திறக்கப்படும். பிறகு வாபி முதல் சூரத், வாபி முதல் அகமதாபாத், தானே முதல் அகமதாபாத் மற்றும் மும்பை முதல் அகமதாபாத் வரை திறக்கப்பட்டு, முழு புல்லட் ரயில் பாதையும் ஒன்றிணைக்கப்படும்.
வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தான், புல்லட் ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே துறைக்கு நம்பிக்கையை அளித்தது” என அவர் கூறினார்.
இந்தியாவில் தற்போது வரை 164 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் புல்லட் ரயில் சேவையும் நாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்கி விட்டால், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு தனி பெருமை கிடைத்துவிடும்.
விரைவு ரயில்களைக் காட்டிலும் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் கட்டணம் சற்று அதிகமாக இருந்தது. அதேபோல் தற்போது வந்தே பாரத் ரயில் கட்டணத்தைக் காட்டிலும் புல்லட் ரயிலில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.