

இந்திய நாட்டின் முதலாவது மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவையை இன்று (ஜூலை 17) பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹரியானா மாநிலம் ஜிண்ட் முதல் சோனிபட் ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த ஹைட்ரஜன் ரயிலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்.
சுமார் 89 கி.மீ. வரை பயணிக்கக் கூடிய இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம் வெறும் 5 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. பொதுமக்களின் ரயில் பயணத்தை வேகப்படுத்தவும், அதிநவீன பயணத்தை வழங்கவும் ஹைட்ரஜன் ரயில் இன்று அறிமுகமாகியுள்ளது. கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைப்பதே ஹைட்ரஜன் ரயிலின் தனிச்சிறப்பு.
டீசல் ரயிலுக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயிலில் வெறும் நீரும், நீராவியும் மட்டுமே கழிவாக வெளியேறும்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 75 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் ரயிலைத் தொடக்கி வைத்த பிரதமர், புனரமைக்கப்பட்ட ரயில் ரனநிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை பூங்கா, குன்னூர் மற்றும் சின்ன சேலம் உள்ளிட்ட 3 ரயில் நிலையங்கள் இதில் அடங்கும்.
உலகளவில் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் ஆகிய 4 நாடுகளில் மட்டுமே தற்போது ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இதன்மூலம் உலகளவில் ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் 5-வது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
இந்தப் பெருமைக்கு மிக முக்கிய காரணமே சென்னையில் உள்ள ஐசிஎப் நினுவனம் தான். ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி சோதனை செய்வது வரை அனைத்துப் பணிகளையும் திறம்படச் செய்தனர் ஐசிஎப் பணியாளர்கள்.
டீசல் மற்றும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ஹைட்ரஜன் ரயில், இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஹைட்ரஜன் எரிபொருளை மட்டுமே கொண்டு, மணிக்கு சுமார் 140 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் ஆற்றல் கொண்டது ஹைட்ரஜன் ரயில்.
ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் உலகின் மற்ற 4 நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிக குதிரைத் திறனுடன் இயக்குகிறது. 1,200 குதிரைத் திறனுடன் இயங்கும் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், அதிகபட்சமாக 89 கி.மீ. வரை இயக்கப்படுகிறது.
உலகில் ஹைட்ரஜன் ரயிலை இயக்கிய 5-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் நான்கு நாடுகளும் இந்தியா இயக்கும் தொலைவை விட குறைவான தொலைவு தான் இயக்குகின்றன.
ஹைட்ரஜன் ரயிலில் பயணிப்பதற்கான குறைந்தபட்ச கட்டணம் வெறும் 5 ரூபாய் தான். மேலும் இதில் பயணிக்க அதிகபட்ச கட்டணம் 25 ரூபாய். மெட்ரோ ரயில் அறிமுகமான போது, அதில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சாமானிய மக்களால் மெட்ரோ ரயிலில் பயணிப்பது என்பது சற்று கடினமாகவே இருந்தது. ஆனால் ஹைட்ரஜன் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவாக இருப்பதால், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு விரைவில் ஹைட்ரஜன் ரயில் சேவை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் 35 ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்க மத்திய அரசு ரூ.2,800 கோடியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. மற்ற ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், இன்று ஹரியானாவை அலங்கரித்த ரயில், விரைவில் மற்ற மாநிலங்களையும் அலங்கரிக்க உள்ளது