

இந்தியாவில் கோடை காலம் தொடங்கி கடுமையான வெயில் வாட்டி வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் கோடைகாலம் கூடுதலாக ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கோடையில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரை, கடுமையான வெயில் வீசினாலே பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்நிலையில் ஆண்டுதோறும் கூடுதலாக ஒரு 40 நாட்கள் வரை கோடை காலம் நீடிக்கும் என்ற கணிப்பு, பொதுமக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) நடத்திய ஆய்வு முடிவில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) வெளியிட்ட அறிக்கையில், “காலநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு நாடுகளில் வெப்பம் மற்றும் மழை அளவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்பம் கூடுதலாக நீடிக்கும்.
ஆண்டுதோறும் இயல்பைக் காட்டிலும் 15 முதல் 40 இரவுகள், முன் எப்போதும் இல்லாத வகையில் வெப்பம் அதிகமாக இருக்கும். இது தவிர கனமழை பெய்யும் நாட்களும் ஆண்டுதோறும் 10 முதல் 30 நாட்கள் வரை அதிகரிக்கக் கூடும்.
குறிப்பாக இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பொழிவு தாமதமாவதும், கோடை காலம் முன்கூட்டியே தொடங்குவதும், மழைப் பொழிவு குறைவதும், ஆண்டுதோறும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுமாக உள்ளது.
இந்நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் அதாவது 2046 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் கூடுதலாக கோடை காலம் நீடிக்கும் என்ற தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கும் போது, எப்போது இந்த கோடை வெயிலின் தாக்கம் குறையும் என்று காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, மேலும் ஒரு மாதம் வெப்பம் நீடிக்கும் என்பது பேரதிர்ச்சியாகவே அமைந்துள்ளது.