
விநாயக சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பிரபலமான இந்து பண்டிகையாகும். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 27-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் மும்பை மற்றும் கர்நாடகாவில் 10 நாட்கள் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மும்பையில் இப்போதே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். மும்பையின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும். விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜி.எஸ்.பி சேவா மண்டல் குழு, விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது, தங்கம் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்படும் பெரிய விநாயகர் சிலைகளை அமைப்பதில் பெயர் பெற்றது.
கிங் சர்க்கிள் ஜிஎஸ்பி பந்தல் விநாயகர் என்பது, கிங் சர்க்கிள் அருகாமையில் இருக்கும் பகுதியில் ஜி.எஸ்.பி சேவா மண்டல் அமைத்த பந்தலில் உள்ள தங்கம், நகை அலங்காரத்துடன் கூடிய பிரமாண்ட விநாயகர் சிலையைக் குறிக்கிறது. அந்த வகையில் மும்பை நகரத்தின் பணக்கார கணபதியாக கருதப்படும் பிரசித்தி பெற்ற கிங் சர்க்கிள் ஜிஎஸ்பி பந்தல் விநாயகருக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு ரூ.474 கோடியே 46 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. சேவா மண்டல் அதன் பந்தல், சிலை, ஆபரணங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த காப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளது. பயங்கரவாதிகள் அல்லது கலவரங்களால் ஏற்படும் தாக்குதல்கள் உட்பட அனைத்து வகையான தாக்குதல்களையும் இந்த காப்பீடு உள்ளடக்கியுள்ளது. இந்த காப்பீடு விநாயகர் சதுர்த்தி நாளில் தொடங்கி, சிலையில் உள்ள நகைகள் பாதுகாப்பு வைப்புபெட்டகத்தை அடைந்த பின்னரே முடிவடைகிறது.
இதில் விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகள் மட்டும் ரூ.67.03 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பந்தலில் வைக்கப்படும் பொருட்கள் ரூ.2 கோடிக்கும், அங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு ரூ.30 கோடிக்கும், பந்தல் பணியாளர்களுக்கு ரூ.375 கோடிக்கும், ரூ.43 லட்சத்துக்கு தீ விபத்து காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகர் மும்பையில் உள்ள பணக்கார விநாயகர் சிலைகளில் ஒன்றாகும். இந்த சிலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 69 கிலோ தங்கம், 336 கிலோ வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்படும் இந்த பணக்கார விநாயகரை பார்ப்பதற்காகவே உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் திரளாக வந்து நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்வார்கள். பொதுமக்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை விநாயகரை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகர் பூஜைகளில் பங்கேற்க வரும், பக்தர்கள் நியமிக்கப்பட்ட ஆடைக் குறியீட்டைப் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. பந்தலில் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பந்தல் முழுவதும் 48 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24×7 என்ற கண்காணிப்பில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.