
விநாயகர் சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தி என்ற பெயர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு விடும். மராட்டிய மாநிலத்திலிருந்துதான் கணபதி வழிபாடு உலகெங்கும் பரவியது என்றால் அது மிகையாகாது. முன்பெல்லாம் களிமண் பிள்ளையாரை வாங்கி வந்து வீட்டில் வைத்து வணங்கி விட்டு அன்றே வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கிணற்றில் அதைக் கரைத்து விடுவது உண்டு.
இப்பொழுது மண் கணபதி சிலையை வாங்கி வந்து ஒரு பலகையில் வைத்து வீட்டை சுத்தப்படுத்தி கோலமிட்டு, செம்மண்ணால் அதனை சுற்றி கோடிட்டு சிலைக்கு நேராக வாழையிலையை பரப்பி அதில் பச்சரிசி வைத்து, குடை பிடித்து, குத்து விளக்கேற்றி, விரும்பிய வகைகளில் எண்ணெய், பால், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், சந்தனம், திரவியப்பொடி போன்றவை கொண்டு அவரவர் இஷ்டத்திற்கு ஏற்ப அபிஷேகம் செய்யலாம். கணபதி பூஜைக்கு தும்பை, எருக்கு, வில்வம், அருகம்புல், சங்கு மலர், செம்பருத்தி போன்றவை ஏற்றவையாகும். மோதகம், சுண்டல் வகைகள், அப்பம், அவல் பொரி போன்றவை முக்கிய நெய்வேத்தியப் பொருட்களாகும்.
கணபதி குறும்புக்காரராக இருந்து துறவியருடன் பழகினார். தனது நகைச்சுவை ஆற்றலால் சிலரிடம் தப்பி விடுவார். சிலர் அவரை தூணில் கட்டி வைத்தனர். அவரது உண்மை தோற்றம் தெரிந்த பிறகு அவருக்கு பூரணம் என்னும் இனிப்பு மீது வேக வைத்த அரிசி மாவு வைத்து மூடிய மோதகம் என்னும் கொழுக்கட்டையை அளித்தனர். காலப்போக்கில் கணபதிக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் இதிலிருந்து ஆரம்பமாகிவிட்டது என்கின்றனர். வெண்மையான மூளையினுள் அறிவு பூரணமாக இருப்பதற்கு ஒப்பாகவே கொழுக்கட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது எனலாம்.
காசி மன்னர் அரண்மனையில் நடைபெற்ற விழாவில் தம்பதியரை வாழ்த்திடச் செல்பவர்களுக்கு வழி விடாமல் ஒரு பெரும் பாறைக் கல்லாக குடா என்ற அரக்கன் தடுத்திருந்து தொல்லை தந்தான். விநாயகர் தேங்காய்களை எடுத்து பாறையின் மீது வீசி உடைத்தார். பாறை சிதறியதுடன், குடா அசுரனும் ஒட்டம் பிடித்தான். காலப்போக்கில் விநாயகருக்கு இதிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
விநாயகர் என்றால் வினை தீர்ப்பவர்; கணபதி என்றால் கணங்களின் தலைவன்; பிள்ளையார் என்றால் பார்வதி-பரமசிவனின் பிள்ளையாவார் என்றும் பொருள் கொள்ளலாம். விநாயகர் என்றால் சிறந்த தலைவர் என்றும், தனக்கு மேல் தலைவர் இல்லாதவர் என்பதும் மற்றொரு பெயராகும்.
விநாயகர் ஓங்கார வடிவானவர். ஓங்கார வடிவம் ஏறத்தாழ யானை முகம் போல் காணப்படும். பிள்ளையார் சுழி என்பது எழுதும்போது முதலில் போடப்படும் ஒரு சங்கேதக் குறியாகும். பிள்ளையார் சுழி என்பது வரி வட்டம் என்று சொல்லக்கூடிய நாதமும், விந்தும் சேர்ந்ததாகும்.
விநாயகர் பல்வேறு காலங்களில் பல்வேறு வடிவங்களைத் தாங்கி உள்ளார். தம்பி முருகப்பெருமானுக்கு வள்ளியை திருமணம் செய்விக்க உதவி செய்வதற்காக யானை வேடம் தாங்கி வள்ளியை விரட்டி, வள்ளியையும் முருகப்பெருமானையும் சேர்த்து வைத்தார். துதிக்கை வளையாமல் நேராக அமைந்திருப்பது ஞானத்தை குறிக்கின்றது. அவரே ஞான கணபதி ஆவார். இவரை அரிதாகத்தான் காண முடியும்.
நாட்டின் முக்கியத் தொழிலாக வேளாண்மை இருப்பதால் அத்தொழிலோடு கணபதியையும் சேர்த்துக் குறிப்பதுண்டு. கணபதியின் வாகனம் மூஞ்சுறு என்கிற மூஷிக வாகனம். மூஷிகன் என்றால் திருடன் என்பது அர்த்தம். எலிகள், அணில்கள் போன்றவை பயிர்களை நாசம் செய்யாமல் காத்திட மூஷிகம் தனது இனத்தை கட்டுப்படுத்தும் என்பது ஒரு நம்பிக்கையாகும். விநாயகரின் பெருவயிறு தானிய களஞ்சியத்திற்கு ஒப்பாகக் கூறப்படுகிறது. விநாயகரின் காதுகள் தானியத்தை தூற்றிட உதவும் முறங்களுக்கு ஒப்பானதாகவும், ஒற்றைத் தந்தம் கலப்பையைக் குறிப்பதாகவும், துதிக்கை தானியத்தை உரிக்கும் கருவியை நினைவு கூறுவதாகவும், சர்ப்பகர்ணம் என்னும் காதுகள் பக்தர்கள் சொல்லும் கோரிக்கைகளை கேட்டு திருவருள் புரியச் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
மூஞ்சுறு ரூபத்தில் கணபதி சந்திர லோகத்திற்கு சென்றபோது அவரையும் அவரது வாகனத்தையும் பார்த்த சந்திரன் எள்ளி நகையாடினான். விநாயகர் கீழே விழுந்தபோது மேலும் கேலி செய்தான். இதனால் கோபமடைந்த விநாயகர் நான்காம் பிறை சந்திரனை எவரும் பார்க்க மாட்டார்கள் என்று சபித்தார். சந்திரனது ஒளிவட்டம், தோற்றம் அழகிழக்கும் என்றும், கண்டவர் பாவிகளாவர் என்றும் சபித்தார். இதனால் சந்திரன் நாணி தாமரையில் மறைந்து கொண்டான்.
திருமால், குரு பகவானை அனுப்பி விநாயகரை சமாதானப்படுத்தச் செய்தார். அதன்படி சமாதானமான விநாயகர் நான்காம் பிறையின்போது மனைவி ரோஹிணியுடன் சேர்ந்து இருந்தால் பிறர் காண அவர்களுக்கு பாவம் இல்லை. ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் பிறையில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு நன்மையே; தீமை இல்லை என்றும் கூறினார். இந்த அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்றும், பொதுவாக மக்கள் நான்காம் பிறை சந்திரனை பார்ப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
உலகிலேயே அதிக வழிபாட்டிடங்களைக் கொண்டுள்ள கடவுள் விநாயகரே எனலாம். ஆகையால், நாமும் இந்த பண்டிகைக்கான நோக்கங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு தோப்புக்கரணம் போட்டு, முறையாக வழிபாடு செய்து, வழியனுப்பி வைத்து எல்லா நலன்களையும் பெற்று வளமோடு வாழ்வோம்!