

உலகின் உள்ள டாப் கோடீஸ்வரர்களின் சொத்து மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும் அந்த வகையில் ஆண்டின் இறுதியில் வெளியாகும் உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியல் எப்போதுமே பொதுமக்களிடையே அதிக எதிர்பார்ப்பை தூண்டும் என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் இந்தாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியாவில் 2025ம் ஆண்டின் டாப் 5கோடீஸ்வரர்கள் குறித்ததகவல் வெளியாகியுள்ளது.
* 2025ம் ஆண்டின் இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் குழும தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 8,71,500 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் கால் பதித்துள்ள முகேஷ் அம்பானிக்கு, எண்ணெய், எரிவாயு, தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகம் ஆகியவை சொத்து ஆதாரங்கள் ஆகும். அதுமட்டுமின்றி முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் தரவரிசையில்18-வது இடத்தில் உள்ளார்.
* உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7,63,600 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவின் இரண்டு முக்கிய பெரிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌவுதம் அதானிக்கும் தான் எப்போதுமே போட்டி நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.
* மூன்றாம் இடத்தில் JSW நிறுவனத்தின் நிறுவனர் சாவித்ரி ஜிண்டால் உள்ளார். பிரபல தொழிலதிபர் மறைந்த ஓ.பி. ஜிண்டாலின் மனைவியான சாவித்ரி ஜிண்டால் குடும்பம் எஃகு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை கையாண்டு வருகிறது. இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3,33,600 கோடி ரூபாய் ஆகும். 2024-ம் ஆண்டின் ஆசிய பெண் செல்வந்தர்களின் பட்டியலில் முதல் பெண் செல்வந்தராக சாவித்ரி ஜிண்டால் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல்-ன் தாய் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டல் டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு இந்திய-பிரிட்டிஷ் வணிக உறவுகளை வலுப்படுத்தியமைக்காக, பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆல், கே.பி.இ எனப்படும் Knight Commander விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெரும் முதல் இந்தியரும் இவரே. இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,83,800 கோடி ரூபாய் ஆகும்.
* தகவல் தொழில்நுட்ப துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த HCL டெக்னாலஜிஸின் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் தலைவர், ஷிவ் நாடார் இந்த தரவரிசையில் 4வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழர் ஷிவ் நாடார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,75,500 கோடி ரூபாய் ஆகும். ஷிவ் நாடார் உலக பணக்காரர்கள் தரவரிசையில் 51 வது இடத்தில் உள்ளார்.
அதுமட்டுமின்றி ஷிவ் நாடார், 2025-ம் ஆண்டில் மட்டும் ரூ.2,708 கோடி நன்கொடையாக அளித்துள்ளார். இது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.7.4 கோடியாகும். இந்த நிதி பெரும்பாலும் கல்வி, கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக 'ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன்' மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.