துருக்கியிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையம் வந்த பயணிகளை கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கிறது இண்டிகோ நிறுவனம். இதுகுறித்து பயணிகள் x தளத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
உலகளவில் இயக்கப்படும் விமானச் சேவையின் செயல்திறனை பகுப்பாய்வு செய்து ஆண்டுதோறும் ஒரு பட்டியல் வெளியிடப்படும். அதில் மிகச்சிறந்த ஏர்லைன்ஸ் முதல் மோசமான ஏர்லைன்ஸ் வரை பட்டியலிடப்படும். இந்தப் பகுப்பாய்வில் வாடிக்கையாளரின் மதிப்பீடு, சரியான நேரத்தில் வருகை, கிளம்புதல், உணவு வழங்குதல், பயணிகளின் வசதி போன்றவை கணக்கில் எடுக்கப்படும்.
மேலும் விமான நிறுவனங்கள் திடீர் இடையூறுகளை எவ்வாறு கையாளுகின்றன, இழப்பீடு கோரிக்கைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன, சர்வதேச வழித்தடங்களில் நிலையான சேவையை எவ்வாறு வழங்குகின்றன போன்றவற்றையும் சேர்ப்பார்கள். 54 நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகளின் கருத்தைப் பெற்று இந்த ஆண்டிற்கான பட்டியல் சமீபத்தில் வெளியானது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ இடம்பெற்றுள்ளது.
வாடிக்கையாளர் சர்வீஸ் மற்றும் அவர்களின் கோரிக்கைகளைக் கையாள்வது உள்ளிட்டவற்றில்
இண்டிகோ 103வது இடத்தில் உள்ளது. அதேபோல் துருக்கியின் பெகாசஸ் ஏர்லைன்ஸ் 104வது இடத்தில் உள்ளது.
இந்த செய்திகள் வெளியான பிறகதாவது இண்டிகோ நிறுவனம் இதை சரிசெய்துக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தால் அந்த எதிர்பார்ப்பு முழுவதும் வீணானது.
இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து சுமார் 400 இண்டிகோ பயணிகள் மும்பை மற்றும் டெல்லி போன்ற இடங்களுக்கு வரவேண்டியதாக இருந்தது.
முதலில் விமானம் புறப்பட தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டுஇன் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
விமான பயணி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததாவது, “முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. மேலும் பயணிகளுக்கும் தங்கும் வசதி உணவு வசதி போன்ற எதுவும் வழங்கப்படவில்லை. விமான நிலையத்திற்கு கூட வரவில்லை. பயணிகளை வந்து விசாரிக்கவும் இல்லை.” என்று கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.