இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான விமான நிறுவனம் இண்டிகோ (IndiGo). தினமும் 2,000க்கும் மேற்பட்ட விமானங்களை (Flights) உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இண்டிகோ விமான நிறுவனம் இயக்கி வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல சர்வதேச நாடுகளையும் இந்தியாவோடு இணைப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் 60% க்கும் அதிகமான பங்கைக் கொண்டு இண்டிகோ முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இண்டிகோவிடம் தற்போது 350 க்கும் மேற்பட்ட விமானங்கள் கொண்ட பிரம்மாண்டமான ஏர்பஸ் (Airbus) மற்றும் ஏடிஆர் (ATR) ரக விமானப் படை உள்ளது.
இந்நிலையில், ஜெட் விமான எரிபொருள் (ATF) விலை அதிகரித்துள்ளதால் (மாதந்தோறும் 14%-க்கும் மேல் அதிகரித்துள்ளதால்) எரிபொருள் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க, நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம் முடிவெத்துள்ளது. இதன் காரணாக இண்டிகோ விமானத்தில் உள்நாடு, வெளிநாட்டு பயண டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் கட்டண உயர்வு, இன்று (அக்டோபர் 6) முதல் அமலுக்கு வரும் நிலையில் இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் செய்யப்படும் அனைத்து புதிய டிக்கெட் முன்பதிவுகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெரிவித்துள்ளது. இந்த முடிவினால் புதிய புக்கிங் செய்யும் பயணிகளுக்கான விமானக் கட்டணம் கணிசமாக உயருகிறது.
அதன்படி, உள்நாட்டில் இயக்கப்படும் இண்டிகோ விமானங்களில் எரிபொருள் கட்டணம் கிலோ மீட்டர் வாரியாக குறைந்தபட்சம் ரூ. 375 முதல் அதிகபட்சம் ரூ.1,300 வரை உயர்த்தப்பட உள்ளது.
அதேபோல், வெளிநாட்டு பயணங்களில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ. 10,000 வரை எரிபொருள் கட்டணம் (Fuel Surcharge) உயர்த்தப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமானக் கட்டண உயர்வு (Domestic Flights) :
உள்நாட்டுப் பயணங்களுக்கு, பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து எரிபொருள் கட்டணம் ரூ.100 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தக் கூடுதல் கட்டண விவரம்:
0 - 500 கி.மீ வரை: ரூ.375 (முன்பு ரூ.275 ஆக இருந்தது)
501 - 1,000 கி.மீ வரை: ரூ.600 (முன்பு ரூ.400 ஆக இருந்தது)
1,001 - 1,500 கி.மீ வரை: ரூ.900 (முன்பு ரூ.600 ஆக இருந்தது)
1,501 - 2,000 கி.மீ வரை: ரூ.1,150 (முன்பு ரூ.800 ஆக இருந்தது)
2,000 கி.மீ-க்கு மேல்: ரூ.1,300 (முன்பு ரூ.950 ஆக இருந்தது)
சர்வதேச விமானக் கட்டண உயர்வு (International Flights):
சர்வதேச வழித்தடங்களில் பயணிக்கும் நாடுகளைப் பொறுத்து கூடுதல் கட்டணம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை வசூலிக்கப்படும்:
சார்க் (SAARC) நாடுகள்: ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை
ஐரோப்பிய நாடுகள்: அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்கிறது
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் (ATF) விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த உயர்வு பொருந்தாது, அக்டோபர் 6 முதல் புதிய புக்கிங் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே விமானக் கட்டணம் கணிசமாக உயரும். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.