

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்மூஸ் ஜல சந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிக்க ஈரான் முன்வந்துள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 12 ஆம் தேதி, இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று ஈரான் அரசு, 2 இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியது.
இதன்படி புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரண்டு இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தது. அதற்குப் பின்னும் 30க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தியில் ஈரான் அரசின் அனுமதிக்காக காத்திருந்தன.
இந்நிலையில் பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு, நட்பு ரீதியாக இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது ஈரான் அரசு.
ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்ல நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி அளித்துள்ளது ஈரான். இதன்படி 40,000 டன் LPG உடன் புறப்பட்ட ஷிவாலிக் கப்பல் இன்று ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்தக் கப்பல் இந்தியா வந்தடையும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஷிவாலிக் கப்பல் இந்தியா வந்தடைந்த பிறகு, தற்போது நிலவிவரும் எல்பிஜி தட்டுப்பாடு முற்றிலுமாக நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கப்பல்களுக்கு மட்டும் தற்போது அனுமதி அளித்துள்ள ஈரான், இதற்கு முன்பு சீனா மற்றும் வங்கதேச கப்பல்களுக்கும் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் தட்டுப்பாட்டு நிலவியதை அடுத்து, இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 60 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், தட்டுப்பாடு சீராகும் என்பதால், விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் புக் செய்யும் நடைமுறையில் சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், அதற்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு சாதகமாக ஈரான் செயல்பட்ட அதே வேளையில், ஈரானின் கார்க் தீவிலுள்ள ராணுவ தளங்களை முற்றிலுமாக தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இனிமேல் ஈரானிடம் எந்தவொரு அனுசக்தி ஆயுதமும் இருக்காது என்றும் அமெரிக்காவை நெருங்கவே அச்சப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது மேலும் அடுத்த வாரத்தில் தாக்குதல் இன்னும் பலமாக இருக்க கூடும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.