

ஐபிஎல் தொடரின் 19 ஆவது சீசன் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபிஎல் போட்டி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதல் கட்டத்திற்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.
இந்நிலையில் வருகின்ற 2026 சீசனுக்கு சில புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது பிசிசிஐ. மேலும் சில முக்கிய விதிமுறைகள் ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் நடைபெற்று வரும் லீக் தொடர்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் புகழ் பெற்றதாக இருக்கிறது.
கடந்த 18 சீசன்களாக ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த இரு சீசன்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி இம்முறை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப சென்னை அணியில் இளம் வீரர்கள் உட்பட சஞ்சு சாம்சனும் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியின் வழிகாட்டுதலோடு இம்முறை கோப்பையை வெல்ல போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிமுறைகள்:
* ஒவ்வொரு அணியின் பயிற்சிக்கும் புதிய ஆடுகளங்கள் தயார் செய்யப்பட வேண்டும்.
* ஓர் அணி பயிற்சி செய்த ஆடுகளத்திலோ அல்லது வலைபயிற்சி செய்த இடத்திலோ மற்றொரு அணி பயிற்சி செய்யக் கூடாது.
* ஓர் அணி பயிற்சியை முன்கூட்டியே முடித்து விட்டாலும், அந்த ஆடுகளத்தை மற்றொரு அணி பயன்படுத்தக் கூடாது.
* நடப்பு 2026 ஐபிஎல் சீசனுக்கு ஒவ்வொரு அணியும் 2 பயிற்சி போட்டிகளை மட்டுமே விளையாட முடியும். இந்த பயிற்சி போட்டிகளை விளையாடுவதற்கு முன்பு பிசிசிஐ-யின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியம்.
* முக்கிய ஆடுகளத்தில் இல்லாமல், பக்கவாட்டில் உள்ள ஆடுகளங்களில் மட்டுமே பயிற்சி போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
* இரவு நேரத்தில் பயிற்சி போட்டிகளை நடத்தினால், மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கக் கூடாது.
* பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இரண்டு அணிகளும் ஒரே நேரத்தைக் கேட்டால், அணியின் மேலாளர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஆலோசனையில் உள்ள விதிகள்:
* போனஸ் புள்ளிகள்:
ஓர் அணி 200 ரன்களுக்கும் மேல் எடுத்து பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது குறிப்பிட்ட ஓவர்களுக்குள் இலக்கை எட்டினாலோ போனஸ் புள்ளிகள் வழங்கும் முறை ஆலோசனையில் உள்ளது.
* பவர் பிளே மாற்றம்:
முதல் 4 ஓவர்கள் வரை கட்டாய பவர் பிளே நடைமுறையில் இருக்கும். மீதமுள்ள 2 ஓவர்களை பேட்டிங் செய்யும் அணி 16 ஓவர்களுக்குள் தங்களுக்குத் தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வசதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.