
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் இறங்கியுள்ளது. இதனால் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா என்ற அச்சம் உலக நாடுகள் இடையே எழுந்துள்ளது.
நாடுகளில் இடையே நடந்து வரும் போர் உலகளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போர் இன்னும் முடிவு எட்டாத நிலையில் தற்போது இஸ்ரேஸ்-ஈரான் இடையே தொடங்கி போர் உலக நாடுகளிடையே கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹமாஸ் அமைப்பை இலக்காக கொண்டு காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்தாண்டு இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது.
இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே சற்று போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ந்தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், அணு விஞ்ஞானிகள் என அணுசக்தி துறையை குறி வைத்து தாக்கியது.
அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் என பிற பகுதிகளையும் தங்கள் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது. தங்கள் போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் பரவலாக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.
இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி வருகிறது. இதில் இஸ்ரேலும் சேதங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஈரானின் இஸ்பகானில் உள்ள அணு ஆய்வு மையத்தை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியது.
மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த ராணுவ மோதல் 2-வது வாரத்தை எட்டி இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் ராணுவ மோதலில் ஈரானில் 660-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மறுபுறம் இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணு ஆய்வு மையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அந்த நாட்டு 3 முக்கிய தளபதிகளையும் கொலை செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
அதுமட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் ஈரானும், உலக நாடுகள் போரை நிறுத்தக் கோரிய பேச்சுவார்த்தையை ஏற்காமல் நீயா.. நானா என்ற சண்டையில் களம் இறங்கியுள்ளதால் இருநாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நேரடியாக போரில் இறங்குவது குறித்து 2 வாரத்தில் முடிவு எடுப்பதாக டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் திடீரென இன்று (ஜூன் 22), ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திய பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் , ‘ஈரான் மீதான தாக்குதல் வெற்றியடைந்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு வாழ்த்துகள். இந்த தாக்குல் தொடரும். ஒன்று அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும்’ என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஈரான் அமைதியை விரும்பவில்லை என்றும் அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து, அதனை ஊக்குவித்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களத்தில் குதித்து அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது, மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா என்ற அச்சம் உலக நாடுகள் இடையே எழுந்துள்ளது.