

மேற்காசிய நாடுகளில் நடக்கும் போரால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இருபுறமும் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
னஇந்நிலையில் நேற்று முன்தினம் ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பழிவாங்கும் விதமாக கத்தாரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கியது ஈரான். இதற்கு அமெரிக்கா, சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் அமெரிக்காவின் மதிப்புமிக்க மற்றும் கண்ணுக்குத் தெரியாத ஐந்தாம் தலைமுறை F35 லைட்டினிங் 2 போர் விமானத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்தப் போர் விமானத்தை அவசரமாக அமெரிக்க அதிகாரிகள் தரையிறக்கியுள்ளனர்
ஈரானின் தரை-வான் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் ஈரான் ஏவுகணையால் தாக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் F-35 போர் விமானத்தை தாக்கிய முதல் நாடு என்ற உரிமையை கோரியுள்ளது ஈரான். இந்த விமானத்தின் தற்போதைய நிலை என்னவென்று இன்னும் வெளியாகவில்லை. விமானியின் உடலநிலை சீராக உள்ளது எனவும், இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
125 அமெரிக்க, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அதிநவீன F-35 போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. இதன் விலை 100 மில்லியன் டாலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, கூடிய விரைவில் 150 டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
கத்தாரில் உள்ள எல்பிஜி ஆலையை ஈரான் தாக்கியதன் மூலம், 1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கத்தார் எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி 17% குறைந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்யவே 5 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு 47% இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஈரான் தாக்குதலின் மூலம் இந்த ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகும்.
ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்கியதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி தெற்கு பார்ஸ் எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்க கூடாது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும், போர் நடைமுறையில் இரு வேறு பாதையில் பயணிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.