

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்திய ஜவுளித்துறை, குறிப்பாக கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்டுக்குச் சுமார் 300 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதில் சுமார், ரூ.200 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான இந்த போர் பதற்றம், இந்தியாவின் ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதியில் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
தென்னிந்தியாவின் தொழில் நகரான கோவை மாவட்டத்தில் குறு, சிறு நிறுவனங்கள், நூற்பாலை, பம்ப் மோட்டார் உற்பத்தி, கிரைண்டர் உற்பத்தி என்று பல தொழில்களுக்கு பிரபலம். மேலும், கோவை நகரின் பல்வேறு இடங்களில் பல வணிகப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அந்த வகையில் கோவையில் இருந்து ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வளைகுடா நாடுகளான குவைத், ஷார்ஜா, சவுதி அரேபியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் கோவையில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, வெட்கிரைண்டர் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மட்டையில் இருந்து தென்னை நார், துகள்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் 60,000 தொன்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில் 12,000 சிறு,குறு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொன்னை நார்கள், நார் துகள்கள் சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற துறைமுகங்கள் வழியாக கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது. போர் பதற்றத்தால் ஒரு வாரத்தில் ரூ.100 கோடி தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்கள் நீடித்தால் ரூ.1000 கோடி வரை ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
போர் பதற்றத்தால் ஈரான் தனது கடல் எல்லையை (ஹோர்முஸ் நீரிணை) மூடி உள்ளதால், கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடமானது எண்ணெய் போக்குவரத்து மட்டுமின்றி, வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு தொன்னை நார்கள், ஜவுளி உள்ளிட்ட பொருட்களை எடுத்தும் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இருந்து வந்தது.
தற்போது இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதாலும், இந்த வழியாக சரக்கு போக்குவரத்து நடத்தப்படாது என முக்கிய சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளதாலும், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து 20 முதல் 25 நாட்கள் வரை தாமதமாவதால், குறித்த நேரத்தில் வர்த்தகம் நடைபெறுவது தடைபடுவதுடன், போக்குவரத்து செலவு, ஆர்டர்கள் ரத்து, கட்டாயத் தள்ளுபடி விலைக்கு விற்க வேண்டிய நிலை போன்ற அபாயங்களும் ஏற்பட்டுள்ளதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர், வளைகுடா நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகும் நிலையில் இந்த போர் பதற்றத்தால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
அதாவது இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 8 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், தற்போதைய போர் சூழல் இந்த வர்த்தகத்தைச் சிதைக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர். போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இது நேரடியாக பாலியஸ்டர் நூல்களின் விலையில் எதிரொலிக்கும் என்றும் அஞ்சுகின்றனர்.
இதேபோன்று வெட்கிரண்டர் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அமெரிக்க போர் பதற்றத்தால் வெட்கிரைண்டர்கள் கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர்.
கோவையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் கிரைண்டர்கள் ஏற்றுமதியாகும் நிலையில் தற்போது நிலவும் போர் பதற்றத்தால் வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்களது ஆர்டர்களை ரத்து செய்து விட்டதால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனுப்பப்படாமல் தேங்கியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான 450 வெட் கிரைண்டர்கள், ஐக்கிய அரசு அமீரகத்தின் ஜபல் அலி துறைமுகத்தில் முடங்கியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா வரி உயர்வின் காரணமாக இந்த தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. வரி குறைப்பின் காரணமாக சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது வெடித்துள்ள இந்த போர் சூழல் காரணமாக, ஈரான் தனது கடல் எல்லையை போக்குவரத்தை மூடி உள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளி பொருட்கள், வெட்கிரண்டர், தென்னை நார் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியில் மீண்டும் ஒரு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வருவது மட்டுமே ஜவுளித் துறை உள்ளிட்ட பொருட்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதே ஒட்டுமொத்த தொழில் துறையினரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.